சபா விவகாரங்களில் தலையிட்டு “தலைக்கனத்தைக்” காட்ட வேண்டாம் -பெரிக்காத்தானுக்கு எச்சரிக்கை!
- Muthu Kumar
- 05 Aug, 2025
கோத்தாகினபாலு, ஆக. 5-
சபா மாநிலத்தில் குறைவான ஆதரவைக் கொண்டிருக்கும் வேளையில், மாநில விவகாரங்களில் தலையிட்டு “தலைக்கனத்துடன் செயல்பட வேண்டாம் என்று. பெரிக்காத்தான் நேஷனலை சபா பிகேஆர் எச்சரித்துள்ளது.
மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று. பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் அண்மையில் கேட்டுக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, சபா பிகேஆர் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
"பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பின்பற்றி வரும் தீவிரவாத மற்றும் இனவாத அரசியலைப்போல், மாநில மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியை தூண்டி விடும் நோக்கத்திலான காலத்திற்கு ஒவ்வாத பேச்சு, கடந்த வெள்ளிக்கிழமை தாவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஹம்ஸா ஆற்றிய உரையில் இடம் பெற்றிருப்பதாக, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட ஒரு முகநூல் பதிவில் சபா பிகேஆர் குறிப்பிட்டுள்ளது.
சபாவில் பெரிக்காத்தான் நடந்து கொள்ளும் விதமானது. நகங்கள் இல்லாமல் கிள்ளிப் பார்க்க முயல்வதற்குச் சமமான செயலாகும்" மாநிலத்தில் அது இன்னும் அதிகாரத்தையே பெற்றிருக்கவில்லை. ஆனால், தலைக்கனத்துடன் செயல்படுகிறது.
"அவதூறான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியலை சபா மக்கள் விரும்பவில்லை. தேசிய அரசியல் நிலத்தன்மையை போதுமான அளவுக்கு பெரிக்காத்தான் நேஷனல் பாழ்படுத்திவிட்டது. அத்தகைய உங்களின் அரசியலை சபாவுக்குள் கொண்டு வராதீர்கள்" என்று சபா பிகேஆர் ஹம்ஸாவை கேட்டுக் கொண்டது.
ஹஜிஜியை நிராகரித்து விட்டு, சபா மாநில அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேஷனலிடம் ஒப்படைக்குமாறு, அம்மாநில மக்களை தமது உரையில் ஹம்ஸா கேட்டுக் கொண்டிருந்தார்.
மக்கள் நலனுக்காக இல்லாமல் தமது சொந்த நலனுக்காக ஹஜிஜி மாநிலத்தை ஆட்சி புரிந்து வருகிறார் என்றும் ஹம்ஸா தமது உரையில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் முன்பு நாட்டை ஆட்சி புரிந்தபோது, சபா மக்களின் பிரச்சினைகள் குறிப்பாக மின்சாரம் மற்றும் குடிநீர் விவகாரங்களை முற்றாக நிராகரித்திருந்தது. மாநில அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாமலும் இருந்தது என்று. சபா பிகேஆர் குற்றஞ்சாட்டியது.
ஆனால், நடப்பு ஒற்றுமை அரசாங்கம் சபா மாநிலத்தின் மின்சாரம் மற்றும் குடிநீர்ப் பிரச்சினைகளைக் களையச் செய்வதில் தீவிரம் காட்டி வருவதுடன், சபா மின்சார விநியோகம் மற்றும் சபா மின்சார நிறுவனத்தின் அதிகாரத்தை மாநில அரசாங்கத்திடமே அது ஒப்படைத்தும் இருக்கிறது என்று அது கூறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



