4 ஆண்டுகளில் முதல் முறையாக ஆயர் ஈத்தாம் அணைக்கட்டில் நீர் நிரம்பி வருகிறது!
- Muthu Kumar
- 29 Oct, 2025
கோலாலம்பூர், அக். 29-
கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையினால், கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக பினாங்கின் ஆயர் ஈத்தாம் அணைக்கட்டில் நீர் நிரம்பத் தொடங்கி இருக்கிறது.இதனால் ஆயர் ஈத்தாம் அணைக்கட்டில் தற்போது 99.4 விழுக்காடு வரையில் நீர் மட்டம் அதிகரித்திருப்பதாக, பினாங்கு நீர் விநியோகக் கழகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஆகக் கடைசியாக, கடந்த 2021ஆம் டிசம்பர் 2ஆம் தேதி அந்த அணைக்கட்டில் 93.4 விழுக்காடு நீர் நிரம்பி இருந்ததாகவும் அது கூறியது."ஆயர் ஈத்தாம் அணைக்கட்டின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அண்மையில் மொத்தம் 526.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது. இதனால், அடுத்த வறட்சி காலகட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு ஆயர் ஈத்தாம் அணைக்கட்டில் தற்போது போதுமான நீர் இருக்கிறது" என்று அக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) கே. பத்மநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில் தெலுக் பகாங் அணைக்கட்டில் தற்போது நீரின் அளவு 72.9 விழுக்காடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வறட்சி காலகட்டத்திற்காக நீர் சேமித்து வைக்கப்படும் மற்றும் ஆபத்து அவசர காலத்தின்போது சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு நீரை விநியோகிக்கும் மெங்குவாங் அணைக்கட்டில் நீர் மட்டத்தின் அளவு 91.3 விழுக்காடாக இருக்கிறது.
இந்நிலையில், அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைக் குறைப்பதற்காக அதிக அலைகள் எழும் காலகட்டத்தின்போது, ஆயர் ஈத்தாம் அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்துவிடப்படாது என்று அக்கழகம் கூறியது.
அண்மைய மழையுடன் கூடிய புயலால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, ஆயர் ஈத்தாம் அணைக்கட்டு பொதுமக்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



