50 லட்சம் மாணவர்களுக்காக வெ. 84 லட்சம் செலவில் தேசியக் கொடி முத்திரை!
- Muthu Kumar
- 13 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 13-
நாட்டில் உள்ள பள்ளிகள்,மெட்ரிக்குலேஷன் கல்லூரிகள், ஆறாம் படிவ கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கழகங்களைச் சேர்ந்த 51 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு, தேசியக் கொடி முத்திரை சின்னங்களை (பேட்ஜ் வாங்குவதற்காக மொத்தம் 84 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் மாநில கல்வி இலாகாக்கள் மற்றும் கல்விக் கழகங்களுக்கு அந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், ஓர் எழுத்துப்பூர்வமான மக்களவை பதிலில் குறிப்பிட்டார்.
இந்த பேட்ஜ்களை விநியோகிப்பதில் மொத்தம்
91 விநியோகிப்பாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் தங்களின் பள்ளிச் சீருடைகளில் அணிவதற்காக ஒவ்வொரு மாணவரும் தலா இரண்டு பேட்ஜுகளை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில கல்வி இலாகாக்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்விக் கழகங்களினால் இதன் கொள்முதல் செயல்பாடு நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் விரும்பினால்,அதே அளவிலான மற்றும் பொருத்தமான கூடுதல் பேட்ஜுகளை வழங்க அனுமதிக்கப்படுவதாகவும் ஃபட்லினா கூறினார்.
"மாணவர்கள் மத்தியில் சிறு வயது முதல் நாட்டுக்கான தேசபக்தியையும் நேசத்தையும் நிலைநாட்டும் கல்வி அமைச்சின் முன்முயற்சிகளில் ஒன்றாக இந்த முயற்சி விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களின் பள்ளிச் சீருடைகளில் இத்தகைய பேட்ஜுகளை அணிவதைத் தொடங்கி இருக்கின்றனர். எனினும், அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்று கல்வி அமைச்சு கூறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



