பகடிவதை புரிவோருக்கு இனி 10 ஆண்டு வரையில் சிறை-சட்டம் அமலுக்கு வந்தது!
- Muthu Kumar
- 13 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 13-
பகடிவதை புரிவோருக்கு இனி ஓராண்டிலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட விருக்கிறது. இதற்கான சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒருவருக்கு எதிராக மிரட்டல் விடுப்பது அல்லது ஒருவரை துன்புறுத்துவது அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டிய நிலை நடப்புக்கு வந்திருக்கிறது.
இதன் தொடர்பிலான சட்டத் திருத்தங்களானவை அச்சுறுத்தல், துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்பு வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் ஒரு நபருக்கு துன்புறுத்தல், துன்பம், பயம் அல்லது எச்சரிக்கை விடுத்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத முறையில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுதல் ஆகிய ஆறு புதிய குற்றங்களை உள்ளடக்கி இருக்கின்றன.
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு ஒருவரை வேண்டுமென்றே துன்புறுத்துவோருக்கு அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் வரைக்குமான சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒருவரையோ அல்லது அவர்களைச் சார்ந்துள்ள ஒருவரையோ காயப்படுத்துவோம் என்று நம்ப வைப்பதும், அவர்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளத் தூண்டுவதும் இப்போது ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தை புரிவோருக்கு ஓராண்டு வரைக்குமான சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே இப்போது விதிக்கப்படலாம்.
ஒருவருக்கு மிரட்டல், துன்புறுத்தல், பயம் அல்லது எச்சரிக்கை விடுக்கும் வகையில் அச்சுறுத்தும். துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அவமதிக்கும் வார்த்தைகள் அல்லது செயல்களைப் புரிவது அல்லது செய்வோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
துன்புறுத்தல், துன்பம், பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்..
சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மன ரீதியில் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் ஈடுபாட்டுக்கு ஏற்ப, பகடிவதை புரிவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் இலாகாவின் சட்ட விவகாரப் பிரிவு கூறியது.
“ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் வெளியில் பரப்புவது தொடர்பான குற்றங்களையும் இந்த சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியுள்ளன. இத்தகைய செயல் இப்போது ஒரு கடுமையான குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதிக்கச் செய்யாமல், இந்தச் சட்டத்தின் அமலாக்கம் நியாயமாகவும் சரிசமமாகவும் அமல்படுத்தப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



