ஊழலுக்கு எதிரான போர்! நம்பகத்தன்மை வேண்டும்! நூருல் இசா வலியுறுத்து!

top-news

ஒரு ஜனநாயகத்தின் வலிமை, வெறும் சட்டங்கள் உருவாக்கப்படுவதால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மாறாக, உருவாக்கப்பட்ட சட்டங்கள் எவ்வாறு நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல் படுத்தப்படுகின்றன என்பதிலும், அவற்றை நிலை நிறுத்துவதற்காக பொறுப்பளிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் நம்பகத் தன்மையிலும் அது அளவிடப்படுவதாகப் பி.கே.ஆரின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்தார்.

இந்த உணர்வோடு ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) மீதான கவலைகள் மக்களால் முன் வைக்கப்படுகின்றன. அவர்களது கருத்துகள் அந்த அமைப்பை தாழ்த்துவதற்காக அல்ல. மாறாக ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாப்பதற்காகவே என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் நூருல் இஸா அன்வார் வலியுறுத்தியுள்ளார். அரசு நிறுவனங்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் தங்கள் நடவடிக்கைகளை மக்களுக்கும், நாட்டிற்கும் சேவையை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்துகின்றன என்பதை நிரூபிக்க வேண்டும். சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்களின் நலனுக்காக அல்ல என்பதை மக்களுக்கு தெளிவாக காண்பிக்க வேண்டும்.


அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் அரசின் கொள்கைகள் மற்றும் அமலாக்கத்திற்கும், சட்ட அமலாக்கத்திற்கும் அடிப்படைத் தூணாகும் என்பதை அமலாக்க அமைப்புகள் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் சரியானதை செய்வது மட்டும் போதாது, அரசு சரியானதைச் செய்கிறது என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக வேண்டும் என்றும் அவர் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (SPRM) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஊழலை எதிர்க்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். மாறாக,  சில சூழ்நிலைகளில் அரசியல் போட்டி காரணங்களுக்காக அல்லது தைரியமாக கருத்து தெரிவிப்பதால் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை உருவாக்கும் நிலையில் அது பயன்படுத்தப்படக்கூடாது.

சட்ட அமலாக்கம் அளவுக்கு மீறியதாக, வெளிப்படையற்றதாக அல்லது அச்சுறுத்தலாக மாறும் போது, அது நீதி நிலைநாட்டுவதற்கு உதவாது. மாறாக அவ்வித நாடவடிக்கை ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையே பலவீனப்படுத்தத் தொடங்கும் என்பதுதான் நிதர்சனம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். RM1.1 பில்லியன் மதிப்புள்ள அரசு–ARM Holdings ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளாக இருந்தாலும் சரி, சட்டவிரோதமாகப் பெற்ற நிதிகளை மீட்டெடுத்து தேசிய நிதியை பாதுகாக்கும் முயற்சிகளாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு சட்டபூர்வமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் சில விசாரணைகள் கடுமையான முறையில் நடத்தப்படுவது குறித்து எழும் கேள்விகளையும் நாம் கவனிக்க வேண்டும், என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.


குறிப்பாக தனிப்பட்ட வீட்டு முகவரிகள் உலகமெங்கும் பரவுமாறு வெளியிடப்படுவது, நடைமுறை விதிமுறைகளின் ஒரு பகுதியாக கூறப்பட்டாலும், அதிகமான பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தரத்தை முதலில்  அந்த நடவடிக்கை பூர்த்தி செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் நேர்மை, சமநிலை, அளவுத்தன்மை, தனியுரிமை மீதான மரியாதை மற்றும் நிறுவன பொறுப்புணர்வை பிரதிபலிக்க வேண்டும்சட்டத்தின் முன் யாரும் விடுபட முடியாது என்பது உண்மைதான். ஆனால் பெரும் அளவிலான பொது நிதி சம்பந்தப்பட்டிருக்கும்போது, அந்த பணத்தை யார் கண்காணிக்கிறார்கள், அதைத் தேடிக் கண்டுபிடிப்பவர்கள் எவ்வாறு பொறுப்புக்குட்படுகிறார்கள் என்பதையும் மக்களுக்கு அறியும் உரிமை உண்டு என்பதை நாம் உணர வேண்டும். ஊழலை எதிர்க்கும் முயற்சியின் நம்பகத்தன்மை பொதுமக்களின் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கையை உருவாக்கும் ஒரே வழி, அமலாக்க நிறுவனங்கள் நியாயமாகவும், பொறுப்புடனும், வெளிப்படையாகவும் செயல்படுகின்றன என்று மக்கள் உணரும்போது மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.


மேலும் கார்ப்பரேட் மாபியாகுறித்த குற்றச்சாட்டுகள் தற்சமயம்  பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஆணையர்கள் தனிப்பட்ட பங்கு வைத்திருப்பது குறித்து எழும் கேள்விகள் தெளிவான பதில்களை மக்களும், சில தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர். பதிலின்றி விடப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை குறைபாட்டை உருவாக்கி, ஊழலை எதிர்க்கும் தேசிய முயற்சிகளையே பாதிக்கக்கூடும். இது இன்று அல்லது நேற்று உருவான குற்றச்சாட்டு அல்ல. மாறாக காலம் காலமாக கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள்.  ஆனால் அவை இப்பொழுது பெரிதாக்கி காட்டப்படுகின்றன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை வேரறுக்கும் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே, வலுவான கண்காணிப்பு மற்றும் சமநிலை அமைப்புகள் அவசியமாகியுள்ளன.


அதில் முக்கியமான ஒன்றாக, பாராளுமன்றத்தின் SPRM மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவது ஒரு தீர்வாக இருக்கலாம். பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் காலமுறை அறிக்கைகள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணிகளை மதிப்பாய்வு செய்யலாம். அதேசமயம் பொது கணக்குக் குழு (PAC) அல்லது தனிப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் (PSC) போன்ற அமைப்புகள் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் சட்ட அமலாக்க முடிவுகளை ஆய்வு செய்யலாம். இத்தகைய கண்காணிப்பு விசாரணைகளில் தலையீடு செய்யாது. மாறாக அது அதிக வெளிப்படைத்தன்மையும், பொதுநம்பிக்கையும் உருவாக உதவும்.

SPRM மீது பாராளுமன்ற கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துவது, ஊழலை எதிர்க்கும் முயற்சிக்கு எதிரான தாக்குதல் அல்ல. மாறாக அது அந்த முயற்சியை மேலும் முழுமைப்படுத்தும் ஒரு நடைமுறையாகும். பொறுப்புணர்வு முழுமையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கு அர்த்தமே இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையான அமைப்பு சார்ந்த பரிந்துரைகளை நான் பலமுறை முன்வைத்துள்ளேன். அவற்றை அமல்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என்று ஊழல் ஒழிப்பிற்கான தனது உறுதியான நிலைப்பாட்டினை  அவர் தமது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.


 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *