பலா மரத்தில் ஏறிய கரடி-மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது!

top-news
FREE WEBSITE AD

கெமாமான், ஜூலை 11-

கிஜால், லாடாங் பெலாந்தோ செலாத்தானிலுள்ள ஒரு வீட்டின் பின்புறத்திலுள்ள பலா மரத்தில் பெரிய கரடி ஏறி வீடமைப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததில் அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் அந்த அச்சம் பொறி பொருத்தப்பட்ட 12 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கரடியை வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தாமான் நெகாரா (பெர்ஹிலித்தான்) பிடித்ததில் முடிவுக்கு வந்ததாக மாட் ஃபௌஸி அப்துல்லா, (வயது 42) என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார். வீட்டின் பின்புறத்தில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்குப் பலா மரத்திற்கு அருகில் சத்தமிடுவது செவிமடுக்கப்பட்டது.

அச்சத்தத்தைக் கேட்டதும் நான் கை விளக்கை எடுத்து மரத்தின் மீது பார்த்தேன். பெரிய கரடி ஒன்று மரத்தில் ஏறுவதைக் கண்டு நான் பதறிப் போனேன். அது மிகவும் கடுமையாக இருந்ததால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. நான் வீட்டைப் பூட்டி பிள்ளைகள் அனைவரும் உள்ளே இருப்பதை உறுதிச் செய்தேன்.

அதே நாளில் காலையில் நான் பெர்ஹிலித்தானைத் தொடர்பு கொண்டதையடுத்து அதன் ஊழியர்கள் மாலை 4.00 மணிக்குப் பொறியைப் பொருத்தி விட்டனர். அதன் பிறகு மறுநாள் பின்னிரவு 1.00 மணிக்கு பொறி இருந்த திசையிலிருந்து மிகவும் பலமான சத்தம் கேட்டது. சோதனை செய்துப் பார்த்ததில் கரடி உண்மையிலேயே பொறியில் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் கரடி வந்ததிலிருந்து நாங்கள் சரியாகத் தூங்கவில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக இப்பகுதியில் குடியிருக்கும் எங்களுக்கு இப்போதுதான் முதன்முறையாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கரடி வந்தது இப்பகுதியிலுள்ள 200 குடியிருப்பாளர்கள் மற்றும் அருகிலுள்ள தோட்டத் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.இந்த தோட்ட பகுதி காட்டிற்கு அருகில் இருப்பதால் இதை அடிக்கடி அமலாக்கத் தரப்பினர் கண்காணித்து வருவர் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது மாட் ஃபௌஸி அப்துல்லா குறிப்பிட்டார். இதனிடையே, 40 கிலோ எடையிலான அந்த பெண் கரடி உணவுகளைத் தேடுவதற்காக அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக திரெங்கானு மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் லூ கியென் சியோங் தெரிவித்தார்.

அந்த கரடி இன்னமும் இளம் வயதாக இருந்ததால் எந்த காயமுமின்றி வெற்றிகரமாகப் பிடிக்க முடிந்தது. அதை மீண்டும் பழைய இடத்திலேயே பெர்ஹிலித்தானின் 6 உறுப்பினர்கள் விட்டு விட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய போது லூ கியென் சியோங் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *