கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; “தமிழர் வாழ்வைத் தழுவி நடக்கிறது உன் தமிழ்” – வைரமுத்து புகழாரம்
- Surendran Sumdraraj
- 24 Jun, 2026
சென்னை, ஜூன் 24 –
கவியரசர் கண்ணதாசனின் 99-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரை நினைவுகூர்ந்து உருக்கமான கவிதை வடிவிலான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். கண்ணதாசனின் தமிழ், தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையோடு பயணிப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது சமூக வலைத்தள பதிவில் வைரமுத்து, “கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவி நடக்கிறது உன் தமிழ்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “பாமரர் நாவில் பழமொழியானது உன் பல்லவி” என்றும், “மொழியின் சகல செளகரியங்களையும் பாட்டுக்குள் பரிமாறியவன் நீ” என்றும் கண்ணதாசனின் படைப்பாற்றலைப் பாராட்டியுள்ளார்.
கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள், கவிதைகள், தத்துவ எழுத்துகள் மற்றும் இலக்கியப் படைப்புகள் மூலம் தமிழ் சமூகத்தில் அழியாத இடத்தைப் பெற்றவர். 5,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் ஆயிரக்கணக்கான கவிதைகளையும் எழுதி தமிழ் இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
“இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா உன் தமிழைப் பிரிக்க முடியாதய்யா” என வைரமுத்து தனது பதிவில் குறிப்பிட்டு, கண்ணதாசனின் படைப்புகள் காலத்தை கடந்தும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



