வாரத்திற்கு 45 மணி நேர வேலை ரத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 13-

சுகாதாரப் பணியாளர்களுக்கான வாரத்திற்கு 45 மணி நேர வேலைத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் அரசாங்கத்தின் முடிவு, அவர்களின் கடுமையான பணி மற்றும் தியாகங்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் அங்கீகாரமாக அமைந்திருப்பதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கீப்ளி அமாட் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவினால் அரசாங்கத்தில் பணியாற்றும் 82 ஆயிரம் பணியாளர்கள் பலனடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விதிவிலக்கு தாதியர்கள், சமூகச் சேவை தாதியர்கள், ஆபத்து அவசரப் பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் பொருந்தும்.'சுகாதார அமைச்சின் கீழான மேற்கூறப்பட்ட முக்கியமான சேவைப் பிரிவினருக்கு பழைய முறையான வாரத்திற்கு 42 மணி நேர வேலைத் திட்டத்தை நிலைநாட்டுவது என்ற அரசாங்கத்தின் முடிவை சுகாதார அமைச்சு வரவேற்கிறது.

“ஒவ்வொரு நாளும் அனைத்து வேளைகளிலும், தங்களின் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஓய்வின்றி உதவி செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் உணர்வு மற்றும் தியாகங்களுக்கான அங்கீகாரமாக இம்முடிவு அமைந்திருக்கிறது என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் சுல்கீப்ளி தெரிவித்தார்.

பொதுச் சேவை ஊழியர்களுக்கான சம்பளத் திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 45 மணி நேர வேலைத் திட்ட அமலாக்கம் தொடர்பில் சுகாதாரப் பணியாளர்களினால் எழுப்பப்பட்ட கருத்துகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்படுவதாக, பொதுச் சேவைத்துறை (ஜேபிஏ) நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை
அறிவித்திருந்தது.

சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் முக்கியமான பணிகளின் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் தன்மையை முழுமையாக ஆராய்ந்த பிறகு, அத்தகைய பணிக்கு அசாதாரணமான உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான தயார்நிலை தேவை என்பதை அரசாங்கம் அங்கீகரித்திருப்பதாக ஜேபிஏ கூறியுள்ளது.

வாரத்திற்கு 45 மணி நேர வேலை அமலாக்கத்திற்குத் தயாராவதற்காக, மருத்துவமனைகளுக்கு கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு காலஅவகாசத்தை வழங்கும் பரிந்துரை ஒன்றை ஜேபிஏ முன்னதாக அங்கீகரித்திருந்தது. ஆனால், அந்த காலஅவகாசத்தை மார்ச் 1ஆம் தேதிக்கு பதிலாக மே 31ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு சுகாதார அமைச்சு கோரியிருந்தது. அதை ஆய்வு செய்த ஜேபிஏ அக்காலஅவகாசத்தை முதலில் ஜூன் மாதம் வரைக்கும் பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைக்கும் நீடித்திருந்தது.

வாரத்திற்கு கூடுதலாக மூன்று மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவை மலாயான் தாதியர் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது வாரத்திற்கு 42 மணி நேரம் வேலை செய்து வரும் சமயத்திலும் தாதியர்கள் குறிப்பிட்ட அளவுக்கு பணி தொடர்பான நெருக்குதல்களின் கீழ் வேலை செய்து வருவதாகவும் அது கூறியிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *