நற்குடிமக்களை உருவாக்கும் மையங்களாக பள்ளிக்கூடங்கள் செயல்படவேண்டும் - தான்ஸ்ரீ குமரன்!
- Muthu Kumar
- 24 Oct, 2025
கோலாலம்பூர், அக். 24-
அடிக்கடி நாளிதழ்களில் வெளிவரும் பள்ளிகளின் கட்டொழுங்கு பிரச்சினைகள் தமக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுப்பதாக கல்வியாளரும் மூத்த அரசியல்வாதியுமான தான்ஸ்ரீ க.குமரன் குறிப்பிட்டார்.தனது இரண்டு பெயரப் பிள்ளைகள் பிரச்சினைக்குரிய பண்டார் உத்தாமா பள்ளியில் படித்ததாக குறிப்பிட்ட அவர், பொதுவாக பள்ளிகளில் நடைபெறும் கட்டொழுங்கு மீறல் செயல்கள் பள்ளிகளின் நற்பெயர் கருதி பள்ளி வளாகத்திலேயே அவை தீர்த்துவைக்கப்பட்டு விடுகின்றன.
நாட்டின் நற்குடிமகனை வார்த்தெடுக்கும் மையங்களாக பள்ளிகள் திகழ வேண்டும். அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீதிமன்ற படிகளை ஏறிக்கொண்டும். சிறைச்சாலை கம்பிகளை எண்ணிக் கொண்டும், இருப்பதை காண கண் கலங்குவதாக தான்ஸ்ரீ சு.குமரன் சொன்னார்.
அரசனுக்கு முன்னறிந்து கூறும் ஆற்றல் படைத்தவர்களாக அன்றைய அமைச்சர்கள் இருந்தனர். இந்த நவீன உலகத்தில் அமைச்சரோ, துணை அமைச்சரோ "முன்னறிந்து கூறும் முழுப் பொறுப்பினை ஏற்க முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கான பல்வேறு நிலையிலான ஆசிரியர்களையும் அலுவலர்களையும் கொண்டுள்ள கல்வி அமைச்சகம் இது போன்ற பொறுப்புகளை ஏற்கத்தான் வேண்டும்.
பள்ளிகளில் நிலவும் கட்டொழுங்கு, பாதுகாப்பு, மனநலச் சோதனை. சிசிடிவி கேமராக்கள், வார்டன்கள் எண்ணிக்கை இவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருப்பதை வரவேற்ற தான்ஸ்ரீ குமரன், முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு-நலத்துறை அமைச்சுடன் இணைந்து நடத்தவிருக்கும் உளவியல் திட்டம் காலத்திற்கு ஏற்ற திட்டமென்று பாராட்டினார்.
பள்ளிகளில் கட்டொழுங்கை மேம்படுத்தும் திட்டங்களில் மாணவர்களின் குடும்பங்கள்.
குறிப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் குறித்து அமைச்சின் அறிக்கை ஒன்றும் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள். மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் கவனம் செலுத்தாது பள்ளி கல்வியின்போது அவன் முழு வளர்ச்சிபெற்ற மாணவனாக உருவாக ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் செயல்படவேண்டும்..
ஒரு மாணவன் ஆரம்பப்பள்ளியில் ஆறு ஆண்டுகள், இடை நிலைப்பள்ளியில் ஐந்து
ஆண்டுகள் என்று பதினொரு ஆண்டுகள் கல்வி பெறுகிறான். பண்டார் உத்தாமா பள்ளி மாணவன், ஏழு ஆண்டுகள் பள்ளியில் படித்திருக்கிறான். ஏழு ஆண்டுகளில் எத்தனையோ ஆசிரியரிடம் பயின்றிருப்பான். எந்தவோர் ஆசிரியரும் அவனிடம் எத்தகைய ஒரு மாறுதலையும் காணவில்லையா? 200 முறை கத்தியால் குத்தக்கூடிய வன்மம். துணிச்சல், பதின்நான்கு வயதில் அவனுக்கு எப்படி ஏற்பட்டது.
பி40 குடும்ப வறுமையா?வாழ்விடச் சூழ்நிலையா? சிதைந்த குடும்பமா? தனித்துவிடப்பட்ட தாயின் பிள்ளையா? என்று பல கோணங்களில் ஆராய வேண்டும். பண்டார் உத்தாமா பள்ளியில் நடந்திருப்பது பள்ளிக்கூட பிரச்சினையல்ல, மாணவனின் பிரச்சினையல்ல.அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் பிரச்சினையல்ல, நம் நாட்டு பிரச்சினை. கல்வி அமைச்சின் பிரச்சினை என்பதனை கல்வி அமைச்சு பொறுப்பேற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது.
ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் கூட்டுவது. உபகரணங்கள் எண்ணிக்கையை பெருக்குவது ஒருபுறமிருந்தாலும் மாணவர்களின் மன நலனில் குறிப்பாக மனித உறவில், குடும்ப உறவில், அன்பில், நல்லிணக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர்களைத் தழுவிய பள்ளிக்கூடம், சமுதாயத்தை தழுவிய பள்ளிக்கூடம் என்ற உணர்வோடு செயல்படும் திட்டங்களைக் கொண்டும் நன்னெறிக்கல்விக்கு முன்னுரிமை கொடுத்து நற்குடிமக்களை உருவாக்கும் மையங்களாக பள்ளிக்கூடங்கள் செயல்படவேண்டும் என்று தான்ஸ்ரீ குமரன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



