அமைச்சர் சரத்குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்
- Surendran Sumdraraj
- 29 Jun, 2026
சென்னை, ஜூன் 29 –
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, சேப்பாக்கம் மைதானத்தில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் விளக்கம் கோரிய நிலையில், அமைச்சர் சரத்குமார் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தனது குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மாத்திரையை நொறுக்கிக் கொடுத்ததாகவே அந்த காணொளியில் காணப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.
அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது. சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்தபோதிலும், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் சரண்யா சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



