அம்னோவை விட்டு நான் விலகவில்லை நீங்கள்தான் என்னை நீக்கினீர்கள்!
- Muthu Kumar
- 03 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 3-
அம்னோவை விட்டு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் நானாக விலகியது கிடையாது. ஆனால் கட்சியிலிருந்து என்னை நீங்கள்தான் நீக்கினீர்கள் என்று, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கைரி மீண்டும் அம்னோவுக்குத் திரும்புவார் என்று கூறப்பட்டு வருவதற்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்தாக்கிராமில் கைரி இதனை வலியுறுத்தியுள்ளார். கைரி மீண்டும் அம்னோவுக்குத் திரும்புவார் என்ற செய்திகள் சமூக வலைத் தளங்களில் தற்போது பரவலாசு பகிரப்பட்டு வருகின்றன.
“அம்னோவுக்குத் திரும்புவது குறித்த செய்திகள் குறித்து பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்."அதற்கு நான் விளக்கமளிக்கிறேன். அதாவது, அம்னோவை விட்டு நான் ஒருபோதும் விலகியது கிடையாது. நீங்கள்தான் (அம்னோ) என்னை நீக்கினீர்கள். உண்மைத் தகவலை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள்" என்று கைரி தெரிவித்தார்.
இம்மாதம் 29 ஆம் தேதி சபா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி, மீண்டும் அம்னோவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சில தினங்களுக்கு முன்னர் பெரித்தா ஹரியான் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
கட்சிக்குத் திரும்புவதற்கான கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியின் "ஆசீர்வாதத்தை கைரி பெற்றுவிட்டதாக, ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தது.2022ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த 15ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரம் முழுமையிலும், அம்னோ உயர்மட்டத் தலைவர்களை குறைகூறியதைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் கைரி அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.
அம்னோ மீது தாம் இன்னமும் விசுவாசம் கொண்டுள்ள காரணத்தினால், எந்த ஒரு கட்சியிலும் தாம் சேருவதில்லை என்ற தமது நிலைப்பாட்டை கைரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கோட்டையான கங்கை பூவோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கைரி தோல்வியடைந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



