‘வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை’ எனது மகனைக் குறிப்பிட்டு இப்படி நான் பேசவில்லை- ஸைனின் தாய்!
- Muthu Kumar
- 25 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 25
வாழ்வதா சாவதா என்று எனக்கே தெரியவில்லை என்ற வார்த்தைகளை, மனவளர்ச்சி குன்றிய ஆறு வயதுடைய தமது மகன் ஸைன் ராயன் அப்துல் மத்தினை நோக்கி தாம் கூறியதில்லை.
"என்னை நோக்கி நானே கூறிக் கொண்டு எனது கணவருக்கு நான் அனுப்பி வைத்திருந்த குறுஞ் செய்திதான் அது. மாறாக, எனது மகனை நோக்கி நான் அப்படி சொன்னதில்லை" என்று ஸைன் ராயனின் தாயார் இஸ்மானியா அப்துல் மனாஃப் (வயது 30) நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
நேற்றைய விசாரணையின்போது குறுக்கு விசாரணை செய்த இஸ்மானியாவின் வழக்கறிஞர் ஹரிஸ் மகாதேவன், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்குமாறு கேட்டபோது, இஸ்மானியா தமது சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
"அந்த வார்த்தைகள் என்னை நோக்கி நானே கேட்டுக் கொண்டவை. எனது மகனைக் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை. அன்றைய தினம் நான் பதற்றத்தில் இருந்தேன். மிகவும் குழப்பமாக இருந்தேன். காணாமல் போன எனது மகனைத் தேடி சோகத்தில் இருந்தேன்.
"அப்போது எனக்கு எனது கணவர் மிகவும் தேவைப்பட்டார். விரைந்து வீடு திரும்பி எனக்கு உதவுவதற்காக அவருக்கு நான் அத்தகைய ஒரு குறுஞ் செய்தியை அனுப்பினேன்" என்று, இஸ்மானியா தெரிவித்தார்.
ஸைன் ராயன் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை வேண்டுமென்றே புறக்கணித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான நேற்றைய விசாரணையின் போது இஸ்மானியா இவ்வாறு சாட்சியம் அளித்தார்.எனினும், அச்சிறுவனின் தந்தை ஸைய்ம் இக்வான் ஸஹாரியைப் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை இக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்திருந்தது.
ஆனால், அதே குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் இஸ்மானியாவை தற்காப்பு வாதம் புரியுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் மீது தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி நண்பகலுக்கும் 6ஆம் தேதி இரவு 9.55 மணிக்கும் இடையில், பிஜேயூ டாமன்சாரா டாமாயில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம், 20 ஆண்டு வரைக்குமான சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் செக்ஷன் 31(1) (எ) இன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஸைன் ராயனின் உடல், மறுநாள் டாமன்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடியில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு நீரோடைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
தம்மை தற்காத்துக் கொள்ள போராடியதன் காரணத்தினால் ஸைன் ராயனின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேதப்பரிசோதனை முடிவு வெளிப்படுத்திய பிறகு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது
நீதிபதி ஷாலிஸா வர்னோ முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணை தொடர்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



