வரலாறு படைத்த பெர்லி டான்-எம் தினா!
- Muthu Kumar
- 31 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 31-
பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில், பெர்லி டான்-எம் தினா ஜோடி, மலேசியாவின் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்தது. உலகின் இரண்டாவது தரவரிசை ஜோடியான இவர்கள், அடிடாஸ் அரங்கில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோயேவா-ஸ்டெபானி ஸ்டோயேவா சகோதரிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினர்.
பெர்லி-தினா ஜோடி. எதிர்பார்த்தபடி ஆதிக்கம் செலுத்தி, 21-15, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று. குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தனர். இந்த வெற்றி, ஸ்டோயேவா ஜோடிக்கு எதிரான ஐந்து சந்திப்புகளில் நான்காவது வெற்றியாகும்.
கடந்த மாதம் ஜப்பான் ஓபனிலும் இதே பல்கேரிய ஜோடியை வீழ்த்தி, தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர்.இந்த சாதனை, மலேசிய பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இதுவரை மலேசியாவுக்கு உலக சாம்பியன்ஷிப் பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லி-தினா ஜோடியின் இந்த முன்னேற்றம், அவர்களின் உறுதியையும், ஒத்திசைவையும் பிரதிபலிக்கிறது.அரையிறுதியில் மேலும் கடினமான சவால்களை எதிர்கொள்ள உள்ள இந்த ஜோடி, தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. அவர்களின் ஆட்டமும், திறனும், மலேசிய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி, மலேசியாவின் பேட்மிண்டன் மேன்மையை உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



