சர்க்கரை சுத்திகரிப்பு ஆலையின் குத்தகை காலத்தை நீட்டிக்க பரிந்துரை!
- Muthu Kumar
- 22 Sep, 2025
பட்டர்வொர்த், செப்.22-
பினாங்கு. பிறையில் உள்ள மலேசிய குழும நிறுவனத்திற்குச் சொந்தமான, பிறை சர்க்கரை சுத்திகரிப்பு ஆலையின் நில குத்தகை காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான பரிந்துரையை அமைச்சரவைக் கூட்டத்திற்கு போக்குவரத்து அமைச்சு கொண்டு செல்லும்.
ஆர்ஏசி எனப்படும் ரயில்வே சொத்து கழகத்திற்குச் சொந்தமான நிலத்தில் குத்தகை அடிப்படையில் தற்போது செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையை உடனடியாக இடமாற்றம் அல்லது செயல்பாடுகளை நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படாது.மாறாக, போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அமைந்துள்ள கம்போங் மானிஸ் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் வாழ்க்கை சூழலை கருத்தில் கொண்டு, மறுமேம்பாட்டுத் திட்டம் வாயிலாக அவர்களுக்கு இலவச வீடுகள் வழங்குவது தொடர்பில் அவ்விவகாரம் எழுந்துள்ளது. "தொழிற்சாலை உடனடியாக மூடப்படுவது குறித்து எவ்வித சந்தேகமும் வேண்டாம். தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். எனவே, தொழிற்சாலைக்கு கால அவகாசம் வழங்கப்படுவது மிகவும் நியாயமானது என்று நான் நினைக்கின்றேன். ஆனால், அவர்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். என்றார் அவர்.
1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அத்தொழிற்சாலைக்கான நில குத்தகை, கடந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதி காலாவதியான நிலையில், அப்பகுதிக்கான மேம்பாட்டு பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், வேறு இடத்திற்கு மாற்ற தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அரசாங்கம் அவகாசம் அளிக்கும் என்றும் லோக் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



