கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்-இந்திய வணிகர்கள் போர்க்கொடி!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

பிரிக்பீல்ட்ஸ், செப். 14-

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி சந்தை போடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு தீபாவளி சந்தை கடைகள் கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

சுமார் 20ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் குமார் சுப்பிரமணியம் கூறுகையில், கடந்தாண்டு டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபா ஒவ்வொரு வியாபாரிக்கும் கடைகள் கிடைக்கும் என்று உறுதியளித்திருந்தார். இவ்வாண்டு கடைக்கான பதிவு இணையதளம் மூலம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இணையதளம் மூலம் 36 பேர் விண்ணப்பம் செய்தோம். ஆனால் எங்களில் 11 பேருக்கு மட்டுமே கடைகள் கிடைத்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.கடைகள் கிடைத்தவர்கள் யார் என்றால், கிள்ளான், பினாங்கு, ஈப்போ போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு கடைகள் கிடைத்திருப்பது வேதனையளிப்பதாக அவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டு காலமாக வியாபாரம் செய்பவர்களுக்கு முதல் சலுகை வழங்கப்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் எங்கள் வியாபாரிகள் தீபாவளி சந்தைக்கான பொருட்களை 20,000 முதல் ஒரு லட்சம் வெள்ளி வரை பொருட்களை வாங்கி தயார் நிலையில் இருந்தனர். இப்போது பதற்றமான சூழ்நிலையில் உள்ளனர்.இதன் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்குச் சென்று விவரம் கேட்டபோது கடை கொடுக்கப்பட்டு விட்டது. இனி யாருக்கும் கடை இல்லை என்று தெரிவித்தனர்.

நாங்கள் இப்போது பத்திரிகையாளர்களை நம்பி எங்கள் குமுறலை வெளிப்படுத்துகின்றோம். அரசாங்கம் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.நான் பல ஆண்டுகளாக இந்த பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வியாபாரம் செய்து வருகிறேன் என திருமதி புஸ்பா தெரிவித்தார். இம்முறை கடை கிடைக்காதது வருத்தமளிப்பதாக அவர் சொன்னார். தீபாவளி வியாபாரத்திற்காக பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளேன். கடை கிடைக்காதது மன உளைச்சலாக உள்ளதாக அவர் சொன்னார்.

திருமதி ஷீலா, மாயி ஆகியோர் கூறுகையில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் நாங்கள் இருவரும் 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாண்டு கடை கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டவுடன் மனமுடைந்து விட்டது. வியாபாரப் பொருட்களை பல ஆயிரக்கணக்கில் வாங்கி வைத்துள்ளேன். வருடத்தில் ஒரு நாள் தீபாவளி வருகின்றது. அதில் கிட்டத்தட்ட 19 நாட்கள்தான் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 23 ஆண்டுகளாக தீபாவளி வியாபாரம் செய்து வருவதாக திருமதி அமுதா தெரிவித்தார். ஆனால் இவ்வாண்டு கடை கிடைக்காதது மிக வருத்தமளிப்பதாக அவர் கூறினார். கடந்தாண்டு சொன்னது போலவே அமைச்சர் நேரடியாக வியாபாரிகளுக்கு உறுதியளித்திருந்தார். அந்த உறுதி இப்போது என்னவாயிற்று என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தீபாவளி நேரத்தில் இந்தியர்கள் வியாபாரம் செய்து சிறிது லாபம் பார்ப்பார்கள். அதற்குக்கூட வழியில்லாமல் போய்விட்டது. இணையதளத்தில் 36 பேர் விண்ணப்பம் செய்தோம். இதில் 11 பேருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அமைச்சர் சொன்னதுபோல் எங்களுக்கு கடை கிடைக்க வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *