அன்வார்-தேமு எம்பிக்களுக்கு இடையிலான சந்திப்பு வழக்கத்திற்கு மாறானதல்ல!
- Muthu Kumar
- 13 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 13-
அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் மீதான ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து கலந்து பேசுவதற்காகவே, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தனர்.
அதனால், அச்சந்திப்பு வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்று, தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் விளக்கமளித்துள்ளார். புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற அச்சந்திப்பு, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து உறுப்புக் கட்சிகளுடன் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வின் ஓர் அங்கம்தான் என்று டாக்டர் ஸம்ரி கூறியுள்ளார்.
“அக்கூட்டத்தில் பேசப்பட்டதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. ஆனால், குறிப்பிட்ட விவகாரம் எதுவும் பேசப்படவில்லை. அது, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் பிரதமரிடமிருந்து கோரப்படும் விளக்கங்கள் சம்பந்தப்பட்டவை என்று. நேற்று சனிக்கிழமை கிளந்தானில் உள்ள ஜெலி அம்னோ தொகுதிக் கூட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டாக்டர் ஸம்ரி தெரிவித்தார்.
'ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகள் வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தை நடத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கிய அக்கூட்டம் இரவு 9.20 மணிக்கு முடிவடைந்ததாக பெர்னாமா தெரிவித்தது.
இதன் தொடர்பில், அக்கூட்டத்தில் பங்கேற்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளைப் பெறும் முயற்சியும் தோல்வியில் முடிவுற்றது.
இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களுடனான அன்வாரின் சந்திப்பு நாளை திங்கள்கிழமை மாலையில் புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனம் மீதான விளக்கமும் அது குறித்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் வழங்கப்பட விருப்பதும் அச்சந்திப்பில் அடங்கும் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறியதாக தி ஸ்டார் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



