கனடாவில் பயங்கர கிரிஸ்லி கரடி தாக்கி – 4 மாணவர்கள் படுகாயம்
- Tamil Malar (Reporter)
- 22 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
மாண்ட்ரியல், நவ. 22-
மேற்கு கனடாவின் தொலைதூரப் பகுதியில் உள்ள பெல்லா கூலா பகுதியில் வியாழக்கிழமை மாலை, ஒரு கிரிஸ்லி கரடி பள்ளி மாணவர்கள் குழுவைத் தாக்கிய பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. இதில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பெல்லா கூலா பகுதியில் உள்ள நடைபாதையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர ஊர்தி பணியாளர்கள் நான்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், மற்ற இருவர் கடுமையான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே முதலுதவி பெற்றனர், அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்லி கரடிகள் மிகவும் ஆக்ரோஷமானவை என அறியப்பட்டாலும், மனிதர்கள் மீதான தாக்குதல் அரிதாகவே நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



