மூதாட்டியைக் கொலை செய்த வழக்கு: 4 பேருக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 07 May, 2026
பேராக், மே 7-
பேராக் மாநிலம் தெலுக் இந்தான் பகுதியில் ஆயுதங்களுடன் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் முதியவரைக் கொலை செய்ததாக நான்கு இளைஞர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
எஸ்.ஆர்.சி. பிரகாஷ் ராவ், எம்.வி. அழகேஸ்வரன், டி. தியாகேசன் மற்றும் கே. சங்கர் ஆகிய 25 வயதுடைய நால்வரும் இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் நைடாத்துல் அதிரா அஸ்மான் முன்னிலையில் மலாய் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும், கொலை வழக்கு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டதால், குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, இந்த நால்வரும் இன்னும் கைது செய்யப்படாத ஒருவருடன் சேர்ந்து, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஹிலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள லோரோங் எமாஸ் L2/1, பெலான் பாரு பகுதியில் அமைந்த வீட்டில் என். ஜெயகோபி என்ற முதியவரை தாக்கி கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் கொள்ளை நோக்கத்துடன் அரிவாளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தப்பியோடியுள்ள மற்றொரு சந்தேகநபரை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



