பினாங்கு தேசியக் கொடி விவகாரம்- அக்மாலின் பேச்சை வீ கா சியோங் கடுமையாகச் சாடினார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 13-

தேசியக் கொடி விவகாரத்தில், பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு கடை உரிமையாளருக்கு "தனிப்பட்ட முறையில் பாடம் புகட்டப் போவதாக கூறியிருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேயை, மசீச தலைவர் வீ கா சியோங் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.

தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டதற்காக சம்பந்தப்பட்ட அந்த கடைக்காரர் மீது இன்று புதன்கிழமை குற்றம் சுமத்தப்படவில்லையென்றால், தேசியக் கொடியை எப்படி பறக்க விடுவது என்பது குறித்து அவருக்கு தாம் பாடம் புகட்டப் போவதாக அக்மால் கடுமையாகக் கூறியிருக்கின்றார்.

"தேசியக் கொடிக்கான மரியாதை கேள்விக்குறியாக்கப்படக் கூடாது. ஆனால், அதன் தொடர்பிலான சட்ட அமலாக்கம் சட்டத்திற்குட்பட்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியிலான எச்சரிக்கைகள் அல்லது தனிப்பட்ட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படக் கூடாது என்று வீ கா சியோங் குறிப்பிட்டார். "அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் தன்னிச்சையான காலக்கெடுவைக் கொண்டு நாங்கள் இந்த நாட்டை வழி நடத்தவில்லை.

'இதுபோன்ற பொது மிரட்டல்கள் எதிர்விளைவையே ஏற்படுத்தும். மலேசியர்களை பெருமையுடன் கொடியை ஏற்றச் சொல்ல ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இத்தகைய எச்சரிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் தேசியக் கொடியை ஏற்றுவதில் அவர்களை இருமுறை சிந்திக்க வைக்கும்."ஒரு தவறு தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அல்லது சுய குற்றச்சாட்டிற்கு வழிவகுக்கும் என்றால், ஏன் கொடியை பறக்கவிட வேண்டும்? "என்று நேற்று ஒரு முகநூல் பதிவில் கா சியோங் தெரிவித்தார்.

"சுயமாக நியமிக்கப்பட்ட அமலாக்க அதிகாரிகளாக செயல்படுவதைவிட, கல்வி, முன்மாதிரி மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கை மூலம் தேசபக்தியை ஊக்குவிக்குமாறு அரசியல் தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.

"தேசியக் கொடி சம்பவத்தை ஓர் அரசியல் தந்திரமாக மாற்றும் செயல் நம்மைப் பிரித்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் உண்மையான பணியிலிருந்து திசை திருப்புகிறது. அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்யட்டும். கொடிக் கம்ப விவகாரத்தில் ஈடுபடுவதிலிருந்து அரசியலைத் தவிர்ப்போம் என்று வீ கா சியோங் கேட்டுக் கொண்டார்.

பினாங்கைச் சேர்ந்த, 59 வயதுடைய ஒரு கடை உரிமையாளர் மீது குற்றம் சுமத்த அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு அக்மால் இரண்டு நாள் அதாவது இன்று புதன்கிழமை வரை காலஅவகாசம் வழங்கிய செய்தி அடங்கிய ஒரு காணொளியை அவர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்தக் கடை உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட இல்லையென்றால், ஒரு தேசியக் கொடியை எப்படி முறையாக பறக்கவிட வேண்டும் என்பது பற்றி அவருக்கு தாம் பாடம் புகட்டப் போவதாகவும் அக்மால் மிரட்டல் விடுத்துள்ளார்.தேசியக் கொடியை தவறாக பறக்க விட்டதைப் பார்த்த மறுவினாடியே அதை தாம் சரிசெய்ததாக கூறிய அக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரையில் தேசியக் கொடி தொடர்பிலான ஆறு சம்பவங்கள் நடந்துள்ளன. இம்மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *