சென்னை விமான நிலையத்தில் கொக்கைன்! கென்யா பெண் கைது!

top-news
FREE WEBSITE AD

சென்னை விமான நிலையத்திற்கு எத்தியோப்பியா நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த கென்யா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கொகைன் போதைப்பொருளை வித்தியாசமான முறையில் கடத்தி வந்தார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது. சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில், பயணிகள் போர்வையில் சிலர் பெருமளவில் போதை பொருள் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்தார்கள். அப்படித்தான் எத்தியோப்பியா நாட்டில் இருந்து, சுற்றுலா விசாவில் சென்னை வந்த கென்யா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்னை தடுத்து நிறுத்தி சோதித்த போது, அவரது பேச்சு, செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து தனியாக அழைத்து சென்ற அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை செய்தார்கள். அப்போது கடத்தல் பொருட்கள் எதுவுமே அவரிடம் பிடிபடவில்லை.. அதே நேரம் அந்த பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் ஏதோ இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்பெண் போதைப் பவுடரை மாத்திரை வடிவில் கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.

பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று டாக்டர் உதவியுடன் இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 90 மாத்திரைகளையும் வெளியே எடுத்தார்கள். அதை பிரித்து ஆய்வு செய்த போது, அதில் உயர்ரக கொக்கைன் போதை போதை பவுடர் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.14.2 கோடி மதிப்புள்ள 1 கிலோ 424 கிராம் கொக்கைன் போதை பவுடரை சுங்க இலாக அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கென்யா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், யாருக்காக அது கடத்திவரப்பட்டது. இந்த கடத்தல் பின்னணியில் உள்ள சர்வதேச போதை கடத்தல் கும்பல் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சினிமா பட பாணியில் ரூ.14.2 கோடி மதிப்புள்ள 1 கிலோ 424 கிராம் கொக்கைன் போதை பவுடரை கென்யா நாட்டு பெண் கடத்தி வந்து சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *