வெ.100 சாரா பணத்தில் 4,600 கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கலாம்!
- Muthu Kumar
- 30 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 30-
நாளை 31ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட விருக்கும் 100 வெள்ளி - ரஹ்மா ஆசாஸ் நி உதவி நிதி (சாரா) மூலம் நாட்டு மக்கள், நாடு முழுமையிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 4,600 கடைகளில் பொருட்களை வாங்கலாம்.
இதற்கு முன்னர் மொத்தம் 4,100 கடைகள் மட்டுமே இதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேளையில், தற்போது அவ்வெண்ணிக்கை 4,600 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
"பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களின் மைகார்டுகளில் இந்த 100 வெள்ளி பணம் இயல்பாகவே வரவு வைக்கப்படும். இப்பணத்தைக் கொண்டு அவர்கள் இந்த 4,600 கடைகளில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்" என்று, அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபட்ஸில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"சமூக வலைத் தளங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், மாதம் தோறும் தங்களின் மைகார்டுகளில் 50 வெள்ளி வரவு வைக்கப்படுவதற்கு தாங்கள் தகுதி பெற்றிருக்கின்றோமா என்பது பலருக்குத் தெரியவில்லை. ஆதலால் தங்களின் மைகார்டுகளில் இருக்கும் பாக்கி பணத்தை சரிபார்க்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு சரியான தருணமாகவும் இருக்கும்.
“இவர்கள் மைகாசே அதிகாரப்பூர்வ இணையத் தளத்திலும் தங்களின் பாக்கி பணத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்" என்று ஃபாமி தெரிவித்தார்.பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 வெள்ளி சாரா உதவித் தொகை ஒரு முறை வழங்கப்படும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 23ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் அன்வார் மனநிறைவு அடைந்திருப்பதாக ஃபாமி தெரிவித்தார்.பொதுப் போக்குவரத்து வசதிகள் பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வேளையில், இவ்வாண்டிலும் குறைந்தது அதே எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



