பாஸ் கட்சி மீது பெரிக்காத்தானுக்குப் பயம்! - அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
- Shan Siva
- 13 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 13: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவராக இருந்த முகைதீன் யாசின் ராஜினாமாவை விவாதிக்க அவசர உச்ச மன்றக் கூட்டத்தை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு, PAS தலைமையைக் கைப்பற்றக்கூடும் என்ற அச்சமே முக்கிய காரணம் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், Bersatu கட்சிக்குள் நடைபெறும் அதிகாரப் போட்டியும் இந்தத் தாமதத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் என மற்றொரு ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
PN கூட்டணியில் PAS-க்கு மற்ற உறுப்புக் கட்சிகளைவிட அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், கூட்டணியின் தலைமையை ஏற்க அது சாதகமான நிலைமையில் உள்ளது என்று நுசாந்தரா அகாடமியின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
PAS தலைமையிலான PN உருவானால், மலாய் அல்லாத வாக்காளர்கள் விலகிச் செல்லக்கூடும் என்ற கவலையே மற்ற கூட்டணி கட்சிகளின் தயக்கத்திற்கு காரணம் என்றார். மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற non-Malay வாக்குகள் முக்கியம் என்பதால், PAS தலைமையை அவர்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 1-ஆம் தேதி முகைதீன் தனது பதவியை ராஜினாமா செய்தபோதே, அது PN உச்ச மன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே முழுமையாக அமலுக்கு வரும் என்பதை அவர் அறிந்திருந்ததாகவும், PAS தலைமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை காரணமாக மற்ற கட்சிகள் ஒப்புதல் வழங்கத் தயங்குவதாகவும் அஸ்மி தெரிவித்தார்.
இரண்டு வாரங்கள் கடந்தும் கூட்டம் கூடாதது மிகவும் விசித்திரமானது. PAS-க்கு ஒருமனதாக ஆதரவு கிடைக்காது என்பதைக அவர்கள் அறிந்ததால்தான் இவ்வாறு தாமதம் செய்யப்படுகிறது என அவர் கூறினார்.
PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், முகைதீன் ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவும், புதிய தலைவரை நியமிக்கவும் அவசர உச்ச மன்றக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் PN துணைத் தலைவர், ஜனவரி 1-ல் பதவி விலகியதற்கு பின் 10 நாட்கள் கடந்தும் கூட்டம் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த Bersatu இளைஞர் தலைவர் ஹில்மான் இடாம், கூட்டம் நடத்துவதற்கு முன், உறுப்புக் கட்சிகள் தங்களது உள்நிலை முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார். மேலும், PN அரசியல் சட்டத்தின் படி, உச்ச மன்றம் ஒப்புதல் அளிக்கும் வரை முகைதீனின் ராஜினாமா அமலுக்கு வராது என்றும் தெரிவித்தார்.
இந்த அரசியல் குழப்பம், பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னணியில் உருவானது. அங்கு மந்திரி பெசார் பதவி PAS-இலிருந்து Bersatu-க்கு மாறியதுடன், PAS புதிய மாநில அரசில் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், டாஸ்மானியா பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் கூறுகையில், PN தாமதத்தின் முக்கிய காரணம் Bersatu கட்சிக்குள் நடைபெறும் அதிகாரப் போரே என தெரிவித்தார்.
துணைத் தலைவர் ஹம்சா சைனுதீன், முகைதீனை கட்சி தலைமைப் பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாக வதந்திகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இதன் விளைவாக இரண்டு எம்பிக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அளவுக்கு தாமதம் செய்வது PN-ன் நிர்வாகம் சரியில்லை என்ற மோசமான தோற்றத்தை உருவாக்குகிறது என சின் தெரிவித்தார்.
மேலும், PAS கூட்டத்திற்கு அழைத்தால், Bersatu தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது முக்கிய கேள்வி என்றும் அவர் கூறினார். PAS-ன் தக்குயுதீன் ஹசான் துணை பொதுச்செயலாளர் என்பதால், அவசரக் கூட்டத்தை கூட்ட அதிகாரம் அவருக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



