அஸ்தமனத்தை நோக்கி பெரிக்காத்தான் நகர்கிறது - மாசுக்கி!
- Muthu Kumar
- 28 Oct, 2025
கோலாலம்பூர், அக். 28-
பெரிக்காத்தான் நேஷனல் விரைந்து மீட்டெடுக்கப் படாவிட்டால், அது அரசியல் அஸ்தமனத்தை எதிர்நோக்க நேரிடும். அதோடு, அதிக உத்வேகத்துடன் உருவாக்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் விரைவில் "மரணத்தை சந்திக்கும் நிலைக்கும் சென்று விடும்.
பெரிக்காத்தான் நேஷனலில் முக்கிய உறுப்புக் கட்சியாக இருந்து வரும் பாஸ் கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் முஹமட் ஷுடி மாசுக்கி அக்கூட்டணியின் தற்போதைய நிலையை இவ்வாறு வருணித்திருக்கின்றார்.
பெரிக்காத்தான் நேஷனலில் மற்றொரு முக்கியமான கட்சியாக இருந்து வரும் பெர்சத்துவில் நிலவி வரும் உள்கட்சி நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணப்படாவிட்டால், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு இத்தகைய நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும் என்று அவர் கோடிகாட்டியுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து முஹிடின் யாசினை அகற்றும் தொடர் முயற்சிகளும் இத்தகைய நிலைக்கு வித்திடக் கூடும் என்று. மாசுக்கி மறைமுக எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.
தற்போது பெரிக்காத்தான் நேஷனல் எதிர்நோக்கி இருக்கும் இத்தகைய மிகப் பெரிய விவகாரத்தை முன்னமே தாம் வெளிப்படையாக தெரிவித்து விட்டதாகவும் அதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பெரிக்காத்தான் நேஷனல் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்நோக்கி இருப்பதை. அன்றைக்கே நான் தெரிவித்து விட்டேன். "விரைந்து மீட்டெடுக்காவிட்டால், பெரிக்காத்தான் நேஷனல் அஸ்தமனத்தை நோக்கி விரைந்து பயணம் செய்யத் தொடங்கி விடும் என்று, நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் மாசுக்கி தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஸ் கொண்டிருந்த ஒத்துழைப்பின் வரலாற்றை மாசுக்கி செப்டம்பர் மாத மத்தியில் நினைவு கூறியிருந்தார்.பாஸ் கட்சி இடம் பெற்றிருந்த மொத்தம் மூன்று கூட்டணிகளில் இரண்டு. அதாவது ககாசான் செஜாத்தெரா மற்றும் முவாஃபாக்காட் நேஷனல் ஆகியவை "கல்லறைகளுக்குள் புதைந்துவிட்டன என்று, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அமைச்சராக இருந்தபோது, அவரின் அரசியல் செயலாளராக இருந்த மாசுக்கி அன்றைய தினம் கூறியிருந்தார்.
தற்போது அஸ்தமனத்தை எதிர்நோக்கி இருப்பதாகக் கருதப்படும் பெரிக்காத்தான் நேஷனல்தான் அந்த மூன்றாவது கூட்டணியாகும்.“இரண்டு கூட்டணிகள் கல்லறைகளுக்குள் சென்றுவிட்டன. மற்றொன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது என்று கடந்த செம்டம்பர் 18ஆம் தேதி மாசுக்கி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த சமயத்தில் பாஸ் கட்சி நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பல விவகாரங்களை பெரிக்காத்தான் நேஷனல் எதிர்நோக்கி இருந்தது. பாஸ் கட்சியின் உதவித் தலைவரும் திரெங்கானு மாநில மந்திரி பெசாருமான அஹ்மாட் சம்சூரி மொக்தார், பெரிக்காத்தான் நேஷனலின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருந்ததும் அவற்றில் அடங்கும்.அப்பதவியை வகிப்பதற்கான நபரை பாஸ் கட்சி கொண்டிருக்கிறது என்று துவான் இப்ராஹிம் அறிவித்திருந்த போதிலும், அப்பதவி இன்னமும் நிரப்பப்படாமலேயே இருந்து வருகிறது.
அதோடு, பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்ற சமிக்ஞையை பாஸ் கட்சி தனது இளைஞர் பிரிவு மூலம், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெளிப்படுத்தி இருந்தது.அப்பதவியை வகித்திருந்த ஹம்ஸா ஸைனுடின் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அப்பதவியிலிருந்து அவர் விலகி இருந்தார்.
ஆனால், பாஸ் கட்சியின் கோரிக்கையை புறந்தள்ளிய முஹிடின். சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசாரும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான அஸ்மின் அலியிடம் அப்பதவியை ஒப்படைத்தார்.இத்தகைய சூழ்நிலையில்தான். பெர்சத்து கட்சித் தலைமைத்துவத்தின் சில பதவிகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று. அக்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலக வேண்டும். அவருக்கு பதிலாக ஹம்ஸா அப்பதவிக்கு வர வேண்டும் என்று. அவர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுக்கவும் தொடங்கி இருக்கின்றனர்.பெர்சத்து பதவியை ஹம்ஸா ஏற்றால், அது பாஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும் பெரிக்காத்தான் நேஷனலின் மீட்சிக்கு வழிவகுக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெர்சத்துவில் சில முக்கியமான தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அக்கட்சியின் மத்திய செயற்குழு நாடாளுமன்ற உறுப்பினருமான உறுப்பினரும் தாசேக் குளுகோர் வான் சைஃபுல் வான் ஜனும் இதர நான்கு பெர்சத்து தொகுதித் தலைவர்களும் சில தினங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அதோடு, கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெர்சத்துவில் தற்போது "கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



