தலைமைத்துவப் போராட்டத்தினால் மீளமுடியாத நிலையில் பெர்சத்து!
- Muthu Kumar
- 31 Oct, 2025
கோலாலம்பூர், அக். 31-
கட்சியில் அதிகரித்து வரும் தலைமைத்துவப் போராட்டத்தினால், நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னரே சிதைந்துப் போய்விடும் ஓர் இக்கட்டான சூழலில் பெர்சத்து தற்போது சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.இந்தத் தலைமைத்துவப் போராட்டத்திற்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால், அக்கட்சி நிச்சயம் சிதைந்து போய்விடும் என்று, அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
தலைமைத்துவப் போராட்டத்தினால், மீண்டு வருவதற்கான வழி இல்லாத நிலையை பெர்சத்து தற்போது அடைந்திருப்பதால், அக்கட்சி “அழிந்து போய்விடக் கூடிய மிரட்டலை எதிர்கொண்டிருக்கிறது என்று நுசாந்தாரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
"16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மட்டுமல்ல, அடுத்து வரும் மாதங்களிலும் பெர்சத்து வலுவாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கட்சித் தலைவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கட்சியில் மோதல்கள் இப்போது மிகவும் வெளிப்படையாக நடந்து வருகின்றன” என்று எஃப்எம்டியிடம் அஸ்மி கூறியுள்ளார்.
தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளப் போவதில்லை என்று முதல் முறையாக அறிவித்தபோதே டான் ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால், தாம் சொன்னதிலிருந்து அவர் 160 டிகிரி திரும்பி இருக்கின்றார்.
“தலைவர் பதவிக்குப் போட்டியிடாமல் முஹிடின் தாமாகவே அப்பதவியிலிருந்து
விலகி இருப்பாரேயானால், கட்சி இப்போது சந்தித்து வரும் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருக்கும்" என்று அஸ்மி குறிப்பிட்டுள்ளார்.எனினும், கட்சி நிலைநிறுத்தப்படுமா என்ற கேள்விக்கான பதில், அக்கட்சியின் உயர் மட்டத் தலைவர்களின் இறுதி நடவடிக்கையைப் பொறுத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“இப்போது அவசியம் நடைபெற வேண்டியதெல்லாம். ஒன்று தலைவர் பதவியில் முஹிடின் நீடித்து ஹம்ஸா தரப்பு ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்படுவது அல்லது முஹிடின் தாமாகவே பதவி விலகி அப்பதவியை ஹம்ஸா ஏற்பதுதான்.“நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னரே அரசியல் அரங்கில் பெர்சத்து தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமென்றால், இவற்றில் ஒன்று நிச்சயமாக நடந்தே தீரவேண்டிள்ளது என்று அஸ்மி தீர்க்கமாக விவரித்தார்.
இந்நிலையில், பெர்சத்து கட்சியின் உள் நெருக்கடி மோசமடைந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ள மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி, ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சி தோல்வியடையாது என்று கருதுகிறார்.பாஸ் கட்சியுடன் இருக்கும் வரையில் பெர்சத்துவினால் இன்னமும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியும்" என்று "பாஸ் அவர் கூறுகிறார். எனினும், பாஸ் கட்சியுடனான உறவு மேலும் விரிசலடையுமேயானால் பெர்சத்து கட்சி வீழ்ந்து விடும் என்பதும் நிச்சயம் என்று மஸ்லான் எச்சரித்துள்ளார்.
அதோடு, கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் கட்சியிலிருந்து விலகினாலோ கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் அதிகரித்தாலோ பெர்சத்து பெரிய விளைவை எதிர்நோக்க வேண்டி வரும் என்று. மஸ்லான் குறிப்பிட்டுள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் இரண்டாக உடைந்து, பெர்சத்து கட்சியை விட்டு பாஸ் ஒருவேளை விலகிச் சென்றால், அப்போதே பெர்சத்துவின் எதிர்காலம் ஒரு முடிவுக்கு வந்து விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார். கட்சி உட்பூசல்கள் அதன் உயர்மட்டத் தலமைத்துவத்தில் மட்டுமே நடந்து வரும் வேளையில், பின்னர் அது கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் தலை தூக்கினால், அதற்கு பேராபத்து காத்திருக்கிறது என்று கூறிய அவர், நடப்பு விவகாரங்களை கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அவசியம் ஏற்றுக் கொண்டு, உடனடியாக "புதுப்பித்தல்" செயல்முறையை செயல்படுத்த வேண்டும் என்றார்.
"தற்போதையை நிலைமை முஹிடினுக்கு கடினமான ஒன்றாகும். புதியவர்களிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்து விட்டு பதவி விலகிச் செல்வதை பழைய தலைவர்கள் உடனடியாக மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்று மஸ்லான் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு பல தலைவர்கள் முஹிடினுக்கு தற்போது வெளிப்படையாக கோரிக்கைகளை விடுக்கத் தொடங்கி இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து தம்மை பதவியிறக்கம் செய்வதற்காக சிலர் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஷா ஆலமில் நடந்த பெர்சத்து பொதுப் பேரவையின்போது முஹிடின் யாசின் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்.அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பேராளர்களில் சிலர் விலகிச் செல்லுங்கள்" என்று உரக்கக் கோஷமிட்டனர்.
தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜன் கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டதற்கும் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் முஹிடினின் அத்தகைய பேச்சு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், முஹிடினுக்கு மிக நெருக்கமான சிலர், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்களில் கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியும் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயில் அஜிஸ்சும் இதில் பிரதான "சூத்திரதாரிகள்" என்றும், சனிக்கிழமை கோலாலம்பூரில் நடந்த பெர்சத்து அடிமட்ட உறுப்பினர்களுடனான ஒரு சந்திப்புக் கூட்டத்தின்போது வான் சைஃபுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.
முஹிடின் பதவி விலக வேண்டும் என்று கோருபவர்கள் பட்டியலில் ஆகக் கடைசியாக சேர்ந்திருந்த பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரும் இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் வெளியுறவு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லாவும் அத்தகைய கோரிக்கையை விடுத்த அதே நாளான திங்கள்கிழமை, பகாங் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



