பெர்சத்துவின் அடுத்த குறி ஹம்ஸாதான்!
- Muthu Kumar
- 31 Oct, 2025
கோலாலம்பூர், அக். 31-
பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அடுத்தகுறி அதன் துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடின்தான் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்ஸா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளில் அக்குழு தற்போது ஈடுபட்டிருப்பதாக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டபோது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில் அவரின் பங்கு என்னவென்று கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
“உண்மையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பிரதான இலக்கு ஹம்ஸா மீது நடவடிக்கை எடுப்பதுதான். உண்மையில் அவருக்கு முன்பாக எங்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கை ஒரு "கண் துடைப்புதான்" என்றும் வான் அஹ்மாட் கூறியுள்ளார்.
"பிரதான இலக்கு ஹம்ஸா ஸைனுடின்தான். பெர்சத்து கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கும்,கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்காகவே நாங்கள் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துகிறோம். தற்போது பெர்சத்துவில் நடப்பது வழக்கத்திற்கு மாறான சம்பவங்களாகும்.
"இதில் துரதிஷ்டம் என்னவென்றால், நடப்பவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு வருவதை கட்சித் தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். இது ஒரு பெரிய ஏமாற்றமாகும்"என்று,நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வான் அஹ்மாட் தெரிவித்தார்.பெர்சத்துவின் கௌரவத்தைக் காக்கும்" பிரசாரத்தை மேற்கொள்ள தமது தரப்பு விரும்புகிறது. ஆனால், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடனான சந்திப்புக் கூட்டங்களை கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி தடுத்து வருகிறார்.
“ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள எங்களுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ பெர்சத்து உறுப்பினர்களைத் தடுக்கும் சுற்றறிக்கையை அஸ்மின் வெளியிட்டுள்ளார்" என்று வான் அஹ்மாட் கூறினார்.இந்நிலையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தத் தவறிய காரணத்தினால், தமக்கும் இதர சிலருக்கும் எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைநீக்கம் தொடர்பான மேல் மேல்முறையீட்டு மனுக்களை அதனால் செவிமடுக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



