பெரு அதிபர் அடுத்த ஆண்டில் மலேசியா வருகை தர இணக்கம்- அன்வார்!
- Muthu Kumar
- 16 Nov, 2024
லிமா. நவ. 16
மலேசியாவுக்கு வருகை புரியுமாறு தாம் விடுத்த அழைப்பை, பெரு நாட்டு அதிபர் டினா எர்சிலியா பொலுவார்த் ஸிகாரா ஏற்றுக் கொண்டிருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.டினா எர்சிலியா அடுத்த ஆண்டு (2025) இறுதி வாக்கில் மலேசியாவுக்கு வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நிதி அமைச்சருமான அன்வார் கூறியுள்ளார்.
"மலேசியாவுக்கு வருகை புரியுமாறு அதிபர் டினா எர்சிலியாவுக்கு நான் அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார் என்று, அன்வார் குறிப்பிட்டார்.பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள அரசாங்க மாளிகையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த தங்களுக்கு இடையிலான இருவழி உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஏபெக் பொருளாதார தலைவர்கள் கூட்டத்திற்கு மத்தியில், டினா எர்சிலியாவுக்கும் அன்வாருக்கும் இடையில் முதல் சந்திப்பு நடந்த பின்னர், அவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் பதவியை ஏற்ற பின்னர், லத்தின் அமெரிக்க நாடான பெருவுக்கான தமது முதல் பயணத்தை மேற்கொண்டு இம்மாதம் 12ஆம் தேதி அன்வார் லிமா வந்தடைந்தார். வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையில் நடைபெறும் 31ஆவது ஏபெக் பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அன்வாரின் பயணம், பெருவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருவழி உறவுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தென்அமெரிக்க நாடான பெரு. வடக்கில் இக்குவாடோர் மற்றும் கொலம்பியா மற்றும் கிழக்கில் பிரேசிலுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது.கடந்த 2008 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், இரண்டு முறை ஏபெக் மாநாட்டை ஏற்று நடத்தியிருக்கும் பெருவில் ஒரு கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *