ரஃபிஸியும் நிக் நஸ்மியும் வெளியேறினாலும் மடானி அரசாங்கம் தொடர்ந்து வலிமையுடன் இருக்கிறது!
- Muthu Kumar
- 16 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 16-
ரஃபிஸி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அமைச்சரவையிலிருந்து வெளியேறி விட்டாலும், மடானி அரசாங்கம் தொடர்ந்து வலிமையுடனேயே இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிர்வாகத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து உறுப்புக் கட்சிகளிடமிருந்தும் மடானி அரசாங்கம் இன்னமும் "உறுதியான ஆதரவை" பெற்று வருவதாக, மக்களவையில் ஓர் எழுத்துப்பூர்வமான பதிலில் அன்வார் கூறியுள்ளார்.
"உறுப்புக் கட்சிகள் மத்தியிலான அணுக்கமான ஒத்துழைப்பும் பரஸ்பர மரியாதையும், தொடர்ச்சியான நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் அமலாக்கத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டான் எம்பி ரஃபிஸி மற்றும் செத்தியாவங்சா எம்பி நிக் நஸ்மி ஆகியோரின் ராஜினாமாக்கள், அவர்களின் மரியாதைக்குரிய கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளாகும் என்றும் அவர்களின் முடிவுகளை அரசாங்கம் மதிப்பதாகவும், நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அப்பதிலில் அன்வார் தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் முறையில் அவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவார்கள் என்ற தமது நம்பிக்கையை அன்வார் வெளிப்படுத்தினார்.
ரஃபிஸியும் நிக் நஸ்மியும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதைத் தொடர்ந்து, அமைச்சரவையின் நிலைத்தன்மை குறித்து பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சஹிடான் காசிம் எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்விருவரின் பதவி விலகல், அரசாங்கம் தற்போது நிலைத்தன்மையற்ற மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியிருந்த சஹிடான், "ஒற்றுமை அரசாங்கம்" என்ற சொல் இன்னமும் பொருத்தமானதாக இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
கடந்த மே மாத இறுதியில் நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் ரஃபிஸியும் நிக் நஸ்மியும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். ரஃபிஸி, பொருளாதாரத்துறை அமைச்சர் பதவியையும் நிக் நஸ்மி, இயற்கை வளங்கள் மற்றும் நீடித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பதவியையும் வகித்திருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



