ஒளிமயமான எதிர்காலத்தை பெறுவோம்-ஓம்ஸ் பா. தியாகராஜன் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 19-

மலேசிய இந்தியர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் அன்பும் பெருகிட நாளை கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் நமக்கெல்லாம் நல்லதொரு நாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதோடு ஒரு வளமான சமுதாயமாக நாம் உருப்பெற வேண்டும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய இந்திய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.

ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை இந்திய சமுதாயம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக் கொண்டு எல்லாத் துறைகளிலும் வெற்றி நடைபோட வேண்டும். அரசியல், கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், தொழில்திறன் உள்ளிட்ட பலதுறைகளில் நம் சமுதாயம் என்றும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்தின் மேம்பாடுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அத்திட்டங்கள் மூலம் இந்தியர்கள் என்ன மாதிரியான அனுகூலங்களை பெறலாம் என சிந்திக்க வேண்டும் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் இழந்துவிடாமல், தக்க நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில் இந்தியர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு காண அனைத்து தரப்பினரும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும். எனவே நாளை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாளாக அமைந்திட வேண்டும்.

வீட்டில் ஏற்றுகின்ற தீபம் என்றும் சுடராகி நாடெல்லாம் பரவிட இந்திய சமுதாயம் ஒளிபெற்ற சமுதாயமாக ஒளிர பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் மீண்டும் என் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *