புதிய நம்பிக்கையாய் பயணிப்போம்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
- Shan Siva
- 17 Oct, 2025
பெட்டாலிங் ஜெயா, அக் 17: தமிழ் ஊடகவியலாளர்களுக்கான தீபாவளி சிறப்பு விருந்துபசரிப்பு இன்று பெட்டாலிங் ஜெயா, மகாராஜ் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த
இந்த நிகழ்வில் தமிழ்ப்பத்திரிகையாளர்கள், மற்றும் இணைய ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இன்றைய சமுதாயத்திற்கு மிக முக்கியத் தேவை சமூக உருமாற்றம்
என்று தெரிவித்தார். அத்தகைய சமூக உருமாற்றம் கோயில்களில் இருந்து உருவாக்கப்பட வேண்டும்
என்பதற்காகவே கோயில்களை சமூக உருமாற்று மையங்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை
வகுத்து அதற்கான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்
பிரதமரும் இது குறித்துப் பேசியிருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு
பல சாவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதற்குப் பத்திரிகையாளர்களும் இணைந்து கைகோர்க்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நம் சமூகம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதை ஓர் அரசியல்வாதியாக
உள்ளே சென்று, புள்ளிவிவரங்களின் படி பார்த்தால்தான்
நமக்குத் தெரிகிறது. எனவே நம் சமுதாயத்தை உருமாற்றுவது நமது கைகளில்தான் உள்ளது, புதிய நம்பிக்கையாய் ஊடகவியலாளர்கள் இதனை அறத்தோடு கொண்டு செல்ல
வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வேகமாக தொழில்நுட்பம் வளர்கிறது. 2030-ல் என்ன கணித்திருக்கிறார்களோ
அது அடுத்த வருடமே வந்துவிடுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு
வரப்போகிறது. அதில் நாம் பின்தங்கிவிடக்கூடாது.
அதற்கான திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.
நானும் பத்திரிகையாளர்தான். அவர்கள் என் குடும்பம்தான். பத்திரிகையாளர்களின்
சிந்தனைகளைத்தான் நான் நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறேன். என்னால் அரசியல்வாதியாகப்
பேச இயலவில்லை. ஓர் ஊடகவியலாளராகத்தான் நான் நமது மக்களுக்கான பிரச்னைகளை அணுகுகிறேன்
என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஊடகவியாளர்களுக்கும், இந்து பெருமக்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மக்கள்
அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்றும், மென்மேலும் மேன்மைகள் பெற்று சிறப்புடன் இருக்க வேண்டும் எனத் தாம் பிரார்த்திப்பதாகவும்
அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



