புதிய மருத்துவமனை இருக்கட்டும்... முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு வழிகாணுங்கள்! - MMA நினைவூட்டல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 8: முன்மொழியப்பட்ட பெட்டாலிங் ஜெயா அரசு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, ஒரு விரிவான பணியாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மலேசிய மருத்துவ சங்கமான எம்.எம்.ஏ,  சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கிட்டத்தட்ட 11,000 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 14,700 செவிலியர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது என்றும், மார்ச் மாதம் வழங்கப்பட்ட 5,000 மருத்துவப் பட்டதாரி பணியிடங்களில் 529 மட்டுமே நிரப்பப்பட்டன என்றும் எம்.எம்.ஏ இன்று கூறியது.

மேலும், மனிதவளப் பிரச்சினைகள் காரணமாக, சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாசிர் கூடாங் மருத்துவமனை இன்னும் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை என்றும் அது வலியுறுத்தியது.

ஒரு மருத்துவமனை என்பது அதன் சுவர்களை விட மேலானது. அதற்குள் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களே அதன் அடையாளம். அந்த வகையில், மலேசியா ஒரு சிக்கலை எதிர்கொள்கிறது, அதிலிருந்து வெறும் கட்டுமானப் பணிகளால் மட்டும் நாம் மீண்டுவிட முடியாது  என்று எம்.எம்.ஏ தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

நமது மருத்துவமனைகளில் தேவைக்குப் பற்றாக்குறை இல்லை. அங்கு பணியாளர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பின்னால் பணியாளர் திட்டமிடல் பின்தங்கும்போது என்ன நடக்கிறது என்பதை பாசிர் கூடாங்கில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது கட்டுமானத்தின் தோல்வி அல்ல. அது பணியாளர் திட்டமிடலின் தோல்வி என்று அவர் விளக்கமளித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் தற்போதுள்ள சுகாதார வளங்களை அமைச்சகம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசு கூறினார். அங்கு 1,400-க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட 12 தனியார் மருத்துவமனைகளும், 450-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட தனியார் மருத்துவ நிலையங்களும் உள்ளன.

இருதயவியல், சிறுநீரகவியல் மற்றும் கதிரியக்கப் படமெடுத்தல் போன்ற சேவைகளுக்காகப் பொது நோயாளிகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள சுமார் 100 தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அமைச்சகம் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

முன்மொழியப்பட்ட பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை 500 படுக்கைகள் கொள்ளளவு கொண்ட ஒரு செங்குத்துக் கட்டிடமாக அமைக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறிய செய்தி அறிக்கைக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *