தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய விவகாரம்... யாரும் பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 21: தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் அருள் மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரச்னை தற்போது இந்துக்களின் பெரும் பிரச்னையாய் மாறியிருக்கிறது. 
சுமார் 130 ஆண்டு கால வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த ஆலயம் குறித்து ஆலய நிர்வாகத்தினர் நம்மிடையே சில கருத்துகளை முன்வைத்தனர்.

தலைநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் இந்த ஆலயம் இருக்கும் இடத்தில் அரசாங்கமும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான (DBKL)ம்  புதிய பள்ளிவாசலைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இது சர்ச்சையாகி இருக்கிறது.

பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருந்து வருகிறது, மேலும் உயரமான வணிக கட்டிடங்களுக்கு இடையில் திரளான மக்கள் வரும் ஆலயமாய் விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு DBKL க்குச் சொந்தமான இந்த நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்திகள் கசிந்தது.  இருந்தும், கடந்த பத்து வருடங்களாக DBKL முறையாக ஆலயத்திற்கான நிலம் என்ற ரீதியில் சூரா கொடுத்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் கடைசி ஆண்டில் இருந்துதான் அந்த சூராவும் வருவதில்லை. 

இதனை அடுத்து தற்போது DBKL எங்களிடம் வந்து இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்படவிருப்பதாகவும், எனவே ஆலயத்தை இடமாற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு உடன்பாடில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் திடீரென்று அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவிருப்பதாகவும், வரும் 27 ஆம் தேதி பிரதமர் இதனைத் தொடக்கி வைப்பதாகவும் நாங்கள் கேள்விப்பட்டதில் நாங்கள் அதிர்ந்து போனோம். 

.கோயில் நிலம் 4000 சதுர அடிதான், அவர்கள் வாங்கியிருப்பது மொத்தமாக 11 ஆயிரம் சதுர அடி. ஆனால் இப்போது அடிக்கல் நாட்டுவிழா 7000 சதுர அடியில்தான் செய்யப்போகிறார்கள். எனவே கோயிலை அவர்கள் கை வைக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனாலும் காலப்போக்கில் அடிக்கல் நாட்டி, வேலைகள் தொடங்க ஆரம்பித்தால் நம்மை நகர்த்துவதற்கான செயல்கள்தான் தொடங்கும். நாம் நிச்சயம் தள்ளப்படுவோம் என்று ஆலயத் தலைவர் பார்த்திபன் நம்மிடையே தெரிவித்தார்.

நாமும் இந்த நாட்டு குடிமக்கள்தான். நமக்காக வழங்கப்பட்ட இடம் அது. இருப்பினும் இப்போது வந்து பள்ளிவாசல் என்கிற பேரில் நமது நிலத்தையும் சேர்த்து அபகரித்தால், அது இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும். இதனால் இருதரப்புகளுக்கும் இடையில் மனக்கசப்புகளும், சச்சரவுகளும் வர வாய்ப்பிருக்கிறது. 

எனவே ஆலய தரப்பினர் சார்பில் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். ஆலயமும் அங்கு இருக்கட்டும், பள்ளிவாசலும் அங்கு இருக்கட்டும் நாமெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறோம். எங்கள் தரப்பில் இடமே இல்லை என்றால் இதனைத் தொடரலாம் என்று அவர் விளக்கினார்.

ஒரு தாய் மக்களாகத்தான் நாங்கள் பழகி வருகிறோம். ஒரே குடும்பமாய்தான் இருந்து வருகிறோம். எங்களுக்கு ஒன்று என்றால் அவர்களும், அவர்களுக்கு ஒன்று என்றால் நாங்களும் என ஒற்றுமையாய் சந்தோசமாய் இருந்து வருகிறோம். 

ஒரு பள்ளிவாசல் என்று சொல்லி ஏன் எங்கள் குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறீர்கள்? கொஞ்சம் பொறுமையாக நிதானமாக முடிவெடுப்போம். ஏன் இந்த அவசரம்? முதலில் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதிமொழியை அரசு தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

உண்மையில் அந்தப் பகுதியில் 4 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இந்து கோயில்தான் இருக்கிறது. அதுவும் நூற்றாண்டு கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில். எனவே இந்து பெருமக்களின் உணர்வை  அரசு புரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு ஒரு சுமூகமான தீர்வினை அரசு வழங்க வேண்டும் என்று தாங்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆலய நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு பேசிய ஆலயத் தலைவர் பார்த்திபன் ஆலயம் உடைக்கப்படாது என்றும், மாற்று இடம் அவசியம் இல்லை என்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழக மேயர் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே பொய்ச் செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!
Isu pemindahan Kuil Sri Bhadra Kaliamman di Masjid India, Kuala Lumpur, mencetuskan kontroversi selepas DBKL meluluskan pembinaan masjid baharu di kawasan itu. Walau bagaimanapun, Datuk Bandar memberi jaminan bahawa kuil tidak akan dirobohkan, dan perbincangan masih berlangsung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *