சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இரு உடன் பிறப்புகளின் குடும்பத்துக்கு புதிய வீடு!

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

செபராங் பிறை, ஆக. 25-

மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாகக் குணமாகாத நிலையில் இருந்து வரும் இரு உடன் பிறப்புகளின் குடும்பத்தில் ஒளிவிளக்கேற்றி வைக்கப்பட்டது.

இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, இக்குடும்பத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வந்து கொண்டிருக்கும் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு.குடும்ப சூழ்நிலையை அறிந்து உதவும் பொருட்டு சிறப்பு நிதி திட்டத்தை தொடக்கி வைத்தார்."

இவ்விரு பிள்ளைகளும் பயிலும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் நல்லுள்ளங்களிடமிருந்து 2025 ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரையில் 222,024.41 வெள்ளி கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.




இந்த பணத்திலிருந்து அக்குடும்பத்திற்கு,தென் செபராங் பிறை,பண்டார் தாசேக் முத்தியாராவில் உள்ள ரூமா முத்தியாரா  (67) அடுக்குமாடி குடியிருப்பில் 42,500 வெள்ளியில் ஒரு வீடும் வாங்கி கொடுக்கப்பட்டது. மீதமுள்ள பணம் ஓர் அறங்காவலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டு,பிள்ளைகளுக்கு 18 வயது வரும் வரையில்,அவர்களின் நலனுக்காக மாதந்தோறும் 1,500 வெள்ளி பாட்டியிடம் வழங்கப்படும் என்றார்.

தற்போது அந்த இரு பேரப்பிள்ளைகளின் பாட்டியான அமிர்தம் முனுசாமி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடு,18 வயதுக்குப் பிறகு அந்த பிள்ளைகளின் பெயரில் முழுமையாக மாற்றப்படும் என கூறிய அவர்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற வகையில்,மாநில கல்வி இலாகா மற்றும் மாநில வீடமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்போடும்,ஆதரவோடும் இந்த உதவியை செய்து தனது கடமையை முழு மனதுடன் நிறைவேற்றியதாக பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த ஓர் எளிய நிகழ்வில்,வீட்டிற்கான சாவியை பாட்டியுடன் வந்திருந்த இரு பேரப்பிள்ளைகளிடம் அவர் ஒப்படைத்தார்.இதனிடையே புதிய வீட்டிற்கான சாவியை பெற்றுக் கொண்ட பாட்டி மு.அமிர்தம்,தங்கள் குடும்பத்திற்கு ஒளிவிளக்கை ஏற்றி வைத்த சுந்தரராஜூவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 7.15 மணியளவில் கங்கை பாக்காப் கம்போங் தித்தி ஈத்தாமிலுள்ள தமது வீட்டிலிருந்து பேரப்பிள்ளைகளை சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது,ஜாலான் பெசாரில் லோரி ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில், அண்ணன் தர்ஷன் முருகன் (வயது 7) இடது கையில் கடுமையான காயத்திற்குள்ளான வேளையில்,தங்கை கவிர்ஜிதா முருகன் (வயது 5) தனது வலது காலை இழந்தார்.

இவ்விபத்தில் பாட்டி அமிர்தம் முனுசாமி தலைப்பகுதியில் சிராய்ப்பு காயத்திற்குள்ளானார். இந்த துயர சம்பவம் குடும்பத்தாரை மட்டுமின்றி சுற்று வட்டார மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *