அதிபர் டிரம்பைச் சந்திப்போம் ஆர்ப்பாட்டமும் நடத்துவோம்-பாஸ் அறிவிப்பு!
- Muthu Kumar
- 02 Oct, 2025
கோலாலம்பூர், அக். 2-
இம்மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பாலஸ்தீன மோதல் பற்றிய தங்களின் கவலையைத் தெரிவிக்க பாஸ் விரும்புகிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹசான் நேற்று தெரிவித்தார்.
ஆனாலும், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோலாலம்பூருக்கு வருகை தரும் டிரம்புக்கு எதிராக தமது கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அவர் அறிவித்தார்.
பாஸ் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் கலந்துகொள்வார்கள். மேற்கத்திய சமூகங்கள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்போது அதைவிட பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றார் அவர்.
டிரம்பின் கரங்களில் பாலஸ்தீனர்களின் ரத்தக்கறை படிந்துள்ளன.இந்நிலையில், அவரை நாங்கள் எப்படி வரவேற்க முடியும். ஆசியான் தலைவர் பதவியை மலேசியா வகித்துவரும் வேளையில் அதன் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுப்பது சரிதானா? என்று பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வினவினார். காஸா மக்களின் மீது கொண்டுள்ள அனுதாபம் காரணமாக பெரும்பாலான மலேசியர்கள் டிரம்பின் வருகையை பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும் தக்கியூடின் குறிப்பிட்டார்.
மாநாட்டில் கலந்துகொள்ள டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தற்காத்துப் பேசி வருகிறார். பாலஸ்தீனம் மற்றும் காஸாவுக்கு மலேசியா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசதந்திர வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான் விவேகம் என்றும் அறிவுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



