ஜொகூரைத் தளமாகக் கொண்டு சின்தோமர் நிறுவனத்தின் புதிய முதலீடு!
- Muthu Kumar
- 25 Sep, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர்பாரு, செப்.25
ஜொகூர் தற்போது ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) மூலம் புதிய முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு வருகிற போதிலும், நீண்டகாலமாக மாநிலத்தின் மூத்த மூலதனக் கூட்டாளிகளாக இருந்து வந்த நிறுவனங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சிறந்த சான்றாக சின்தோமர் நிறுவனம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நூற்றாண்டுக்கும் மேலாக ஜொகூரைத் தளமாகக் கொண்டு சின்தோமர் நிறுவனம் தனது ஆசியப் பிராந்தியத்தின் முக்கிய மையமாக பாசீர் கூடாங், குளுவாங் மற்றும் கூலாயில் உள்ள ஆசிய புதுமை மையம் (Asia Innovation Centre) (AIC) செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே, நிறுவனம் ஜொகூரில் 1 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலான முதலீட்டைச் செய்து,சுமார் 400 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதில், 300க்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் மாதம் வெ.3,000 சம்பளத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சந்திப்பில் சின்தோமர் நிறுவனம் தனது புதிய உறுதிமொழியையும் அறிவித்துள்ளது. அது சுமார் வெ.200 மில்லியன் முதலீட்டை தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, நிலைத்தன்மை கொண்ட monomer உற்பத்தி,புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு வளர்ச்சியில் செலுத்த உள்ளது. இதற்கு முழுமையான ஆதரவை மாநில அரசு வழங்கும் என்றும், குளுவாங் ஆசிய தெற்காசிய வணிக மையமாகவும், கூலாய் உலகளாவிய தயாரிப்பு புதுமைப் பீடமாகவும் உருவாக்கப்படும் எனவும் மந்திரி பெசார் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு,ஜொகூரின் நிலைத்தன்மை கொண்ட ரசாயனத் துறையின் நிலையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாலிமர், பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் புதுமை துறைகளில் உள்ளூர் திறமைகளை மேம்படுத்தவும் பெரும் வாய்ப்புகளைத் திறக்கிறது. இது அனைத்தும் ஜொகூரை உலகத் தரமான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை மையமாக உருவாக்கும் மாநிலத்தின் நோக்கத்தோடு இணைந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இந்த புதிய உறுதிமொழி ஜொகூரை முன்னணி முதலீட்டுத் தளமாகவும், நிலைத்த ரசாயனத் துறையில் பிராந்திய முன்னோடியாகவும் உயர்த்தும். அதேசமயம், ஜொகூர் மக்களுக்கு மிகப்பெரிய பயன் அளிக்கும்," என்று மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



