ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ நாளை விண்ணில் பாய்கிறது
- Surendran Sumdraraj
- 17 Jul, 2026
ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 17-
இந்திய விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக, தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட் நாளை, ஜூலை 18ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டைத் தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை காலை 11.30 மணிக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ராக்கெட்டில் கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட் நிறுவனத்தின் ‘ஸ்கோப்’ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சோதனைச் சுமைகள் இடம்பெற்றுள்ளன. காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவுப் பொருட்களும் இதில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
முழுமையாகக் கார்பன் கலவைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விக்ரம்-1, மூன்று கட்டங்களைக் கொண்ட ராக்கெட்டாகும். இதில் 3-டி அச்சிடும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 350 கிலோ எடைகொண்ட சிறிய செயற்கைக்கோள்களைக் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறனுடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் சோதனைப் பயணத்தில் பூமியிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் உயரத்திலான சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதல் வெற்றி பெற்றால், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக அமையும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



