உறுதியான உத்தரவாதம் இன்றி போர் நிறுத்தம் பயனற்றது – டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
- Surendran Sumdraraj
- 27 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 27-
உறுதியான உத்தரவாதங்கள் இல்லாத போர் நிறுத்த முயற்சிகள், வன்முறையின் சுழற்சியை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
காசா மற்றும் லெபனான் போன்ற பகுதிகளில் முன்னர் ஏற்பட்ட அனுபவங்கள் இதனைத் தெளிவாக நிரூபித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலையான அமைதியை ஏற்படுத்தவில்லை என்றும், அவை தற்காலிக இடைவேளைகளாக மட்டுமே மாறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உறுதியான உத்தரவாதம் இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு போர் நிறுத்தமும், வன்முறையின் சுழற்சியைத் தொடர்ச்சியாக உருவாக்கும். காசா மற்றும் லெபனான் சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும்,” என அவர் தனது சமூக வலைதளமான முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், நீடித்த அமைதியை அடைய வேண்டுமானால், அது நீதிமுறையையும் பொறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் நீண்டகால உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், உலக நாடுகள் தற்காலிக தீர்வுகளை விட நிலையான மற்றும் நியாயமான அமைதி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



