மலேசியர்களின் வெள்ளத்தில் சிக்கிய கார்களை இலவசமாக இழுத்து வர நாங்கள் தயார் – ஜித்ரா டவ் டிரக் குழு உதவிக்கரம்
- Tamil Malar (Reporter)
- 25 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
புக்கிட் காயு ஹித்தாம், நவ. 25-
தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் கொட்டும் கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மலேசியர்களின் கார்கள் சேதமடைந்து சாலையோரம் நின்றுள்ளன. இவர்களுக்கு உதவ மலேசியாவின் ஜித்ரா நகரைச் சேர்ந்த டவ் டிரக் குழு முன்வந்துள்ளது.
குழுவைச் சேர்ந்த முகமட் ஐமான் ஜோஷுவா அப்துல்லா (39) கூறுகையில், “மலேசியர்களின் கார்களை இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ இழுத்து, மலேசிய எல்லை வரை கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் எல்லையை முழுமையாகத் திறக்கவில்லை. வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
கடந்த இரு நாட்களில் மட்டும் பேஸ்புக்கில் உதவி கோரிய பதிவு ஒன்றை வெளியிட்டதும், தாய்லாந்தில் சிக்கிய 16 மலேசியர்கள் ஐமானைத் தொடர்பு கொண்டுள்ளனர். “அவர்களில் பலர் குடும்பத்துடன் பயணித்தவர்கள். கார்கள் பழுதடைந்து, ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். உடனடியாக உதவ வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள்” என்று ஐமான் கவலை தெரிவித்தார்.
தாய்லாந்து தரப்பில் வெள்ள நீர் சற்று வடிந்ததும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை மலேசிய தூதரகமும், எல்லை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



