தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் கிள்ளான் வருகை; பக்தர்களுக்கு அருளாசி
- Shan Siva
- 18 Jul, 2026
கிள்ளான், ஜூலை 18: தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று சிலாங்கூர் மாநிலம் கிள்ளான், புக்கிட் திங்கியில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வில், சிறப்பு பூஜைகள், குருமகா சன்னிதானத்தின் அருளாசி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றன. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.
திருமுறைகள் ஓதுவதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் குருமகா சன்னிதானம் எடுத்துரைத்தார். திருமுறைதான் நமது தாய் என்று எடுத்துரைத்தார். குல தெய்வங்கள் குறித்தும் சமய மாண்புகள் குறித்தும் குருமகா சன்னிதானம் விளக்கினார்.
சைவ சித்தாந்த மரபையும் தமிழ் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் பல நூற்றாண்டுகளாகப் பேணி பாதுகாத்து வரும் தருமபுரம் ஆதீனத்தின் குருமகா சன்னிதானத்தின் வருகையை முன்னிட்டு, ஆலய நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இதனையடுத்து, குருமகா சன்னிதானத்துடன் இடம்பெற்றுள்ள சிறப்பு நேர்காணல் நாளை நமது மலர் டிவியில் இடம்பெறுகிறது. அந்தப் பேட்டியில் தமிழ், ஆன்மிகம், சைவ சித்தாந்தம், இளைஞர்களின் பங்கு மற்றும் சமூகப் பொறுப்பு, ஆதினத்தின் பங்களிப்பு குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



