ஊழலை ஒழிக்கத் தவறினால் நேபாளத்தில் நடந்தது மலேசியாவில் நடக்கலாம்-அஸாம் பாக்கி எச்சரிக்கை!
- Muthu Kumar
- 14 Oct, 2025
பாங்கி, அக். 14-
நாட்டில் லஞ்ச ஊழலைத் துடைத் தொழிக்காமல் அப்படியே விட்டு விட்டால்,கடந்த செப்டம்பர் மாதத்தில் நேப்பாளத்தில் நடந்தது போன்ற பொது அமைதியின்மை நிலையை மலேசியாவும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று. மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைவர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லஞ்ச ஊழலும் அநீதியும் எப்படி பொதுமக்களை சினமடையச் செய்யும் மற்றும் அரசாங்கங்களை சீர்குலைத்து விடும் என்பதற்கு நேப்பாளத்தில் நடந்த சம்பவம் ஒரு நினைவறுத்தலாக விளங்குகிறது என்று, அஸாம் நினைவுறுத்தினார். சிலாங்கூர், பாங்கியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பிலான நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அஸாம் இந்த நினைவறுத்தலை முன்வைத்தார்.
"நேப்பாளத்தை பாருங்கள்,ஓர் இடைநிலைப்பள்ளி மாணவனான அபிஸ்கார் ராவுத்தின் செயலினால் நான் ஈர்க்கப்பட்டேன். நேப்பாள அரசாங்கம் கவிழும் அளவுக்கு வழிவகுத்த ஓர் உரையை அவர் ஆற்றினார் என்று அசாம் தெரிவித்தார்."இருளை தீயிட்டுக் கொளுத்தித் துரத்தும் நெருப்பு நாங்கள், அநீதியை துடைத்தெறியும் புயல் நாங்கள்" என்று அந்த மாணவன் உரக்கப் பேசியதை அஸாம் சுட்டிக் காட்டினார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து நேப்பாள அரசாங்கம் ஆட்டம் கண்டதோடு, அந்நாட்டின் நிதி அமைச்சர் பிஸ்னு பிரசாத் பௌடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் தாக்கவும் பட்டார் என்று அஸாம் தெரிவித்தார்.
லஞ்ச ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் நேப்பாள வீதிகளில் ஆக்ரோஷமாக திரண்டனர். சமூக வலைத் தளங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதினால் தொடங்கிய வன்செயல் ஆர்ப்பாட்டங்களில் 19 பேர் மரணமடைந்த பின்னர் விதிக்கப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு உத்தரவையும் மீறி போலீசாருடன் அவர்கள் மோதினர். அரசாங்கக் கட்டடங்கள், நாட்டின் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கட்டடம். போலீஸ் சோதனை சாவடிகள், வர்த்தகக் கட்டடங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
அவற்றில் அதிபர் ராம்சந்ரா பௌடல் மற்றும் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆகியோரின் வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர். பிரதமரும் உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்தகைய ஒரு சூழலை சந்திக்க மலேசியர்கள் நாட்டை அனுமதித்துவிடக் கூடாது என்று அஸாம் வலியுறுத்தினார்.
"நேப்பாளம் போல் நாம் மாற வேண்டாம். என் பார்வையில், நம் நாடு இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், ஊழலை கட்டுப்படுத்தாவிட்டால், அது ஒரு புற்றுநோயாக மாறிவிடும்" என்று அஸாம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



