செய்வது சரியில்லை-எடப்பாடி பழனிசாமியை கோபப்படுத்திய செங்கோட்டையன்!
- Muthu Kumar
- 23 Sep, 2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மேற்கொண்ட ஒரு செயலால் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம்.கடந்த சில நாட்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார்.
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை செங்கோட்டையன் ஆவேசமாக சுட்டிக்காட்டினார். தனது காலக்கெடு குறித்து விளக்கமளித்த அவர், "பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்" என்று அறிவித்தார்.
மேலும், "தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்" என கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். "அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். முக்கியமாக செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து செல்வராஜ் என்பவர் செங்கோட்டையன் வகித்த ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 20ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 13 கவுன்சிலர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகிகள் பலரும் கூட இதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக இவர்கள் அதே நாள் செங்கோட்டையன் நடத்திய கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட எடப்பாடி பழனிசாமி, அவர் செய்வது தவறு.இதெல்லாம் சரி இல்லைங்க,நான் பார்த்துக்கிறேன்.அவர் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார்.இது தவறானது என்று கூறி உள்ளார். எடப்பாடி மிகவும் கோபமாக செங்கோட்டையனை பேசியதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், அதிமுகவில் முக்கிய அரசியல் நகர்வாக, மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அவரைப் போல வேறு யாரும் கிளம்பி வர மாட்டார்கள் என்று மூத்த தலைவர்கள் சிலர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அத்தகைய நடவடிக்கையின் அரசியல் மற்றும் ஜாதி ரீதியிலான தாக்கங்களை கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி வட்டாரங்களின்படி, செங்கோட்டையனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், அவரது தொடர்ச்சியான செயல்கள் அதிமுகவின் தற்போதைய ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



