3 மாநில சட்டமன்றத் தேர்தல்களோடு 16ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் - ஜசெக விருப்பம்
- Muthu Kumar
- 03 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 3-
ஜொகூர், மலாக்கா மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படும் அதேசமயத்தில், மத்தியில் நாடாளுமன்றமும் கலைக்கப்பட வேண்டும் என்று, ஜசெக விருப்பம் தெரிவித்துள்ளது.
அத்தகைய ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தலுக்கான செலவை குறைக்க முடியும் என்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் 2025ஆம் ஆண்டு ஜொகூர் மாநில ஜசெக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றும்போது, அதன் தலைமைச் செயலாளர் லோக் சியூ ஃபூக் அதற்கான காரணத்தை விளக்கினார்.
“பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆனால், கட்சியின் கருத்தை நான் நிச்சயம் அவரிடம் தெரிவிப்பேன். ஏக காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்.. மலாக்கா மாநில சட்டமன்றம் அடுத்த ஆண்டு டிசம்பரில் அதுவாகவே கலைந்து விடும்.சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் 2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அதே ஆண்டு ஏப்ரலில் காலாவதியாக இருக்கிறது. இம்மூன்று மாநில சட்டமன்றங்கள் மேற்கூறப்பட்ட காலகட்டங்களில் கலைக்கப்பட இருக்கும் வேளையில், நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட வேண்டியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களுக்காக மட்டும் 42 கோடி வெள்ளி செலவிடப்பட்டிருப்பதாக,தேர்தல் ஆணையம் கணித்திருக்கிறது. இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் 11 கோடியே 68 லட்சம் வெள்ளி செலவாகக் கூடும் என்று, சபா தேர்தல் ஆணையம் கணித்திருக்கிறது.இந்நிலையில், தற்போது தன் வசமிருக்கும் அதே தொகுதிகளிலேயே பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடும் என்ற கொள்கை நிலைநாட்டப்படும் என்று லோக் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவது குறித்து அன்வாருடன் தாம் கலந்து பேச இருப்பதாகவும் லோக் தெரிவித்தார்.ஜொகூர் மாநிலம் குறித்து பேசிய அவர், தற்போது அம்மாநிலத்தில் தன் வசமுள்ள 5 நாடாளுமன்ற மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகளையாவது அது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



