இரவு விருந்து நிகழ்ச்சியின் புதிய ஏற்பாட்டாளரை அறிவிக்காதது நான் செய்த பெரிய தவறு!
- Muthu Kumar
- 10 Oct, 2025
கோலாலம்பூர், அக். 10-
மலேசிய சுற்றுலாத்துறையின் குளோபல் டிராவல் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர் மாற்றப்பட்ட தகவலை அறிவிக்கத் தவறியதே தாம் செய்த மிகப் பெரிய தவறு என்று, சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ளார்.அந்த விருந்து நிகழ்ச்சியில் மது பானம் பரிமாறப்பட்டது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவர் தமது தவற்றை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாற்றப்பட்டது குறித்து தாம் அறிவிக்கத் தவறிய காரணத்தினால், அந்நிகழ்ச்சியை டூரிசம் மலேசியாதான் ஏற்பாடு செய்திருந்தது என்று பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து எழத் தொடங்கியது என்று, மக்களவையில் நேற்று தியோங் விளக்கமளித்தார்.
அதோடு, விருந்து நடந்த அரங்கத்தின் பிரதான மேடையின் திரையில் பொறிக்கப்பட்டிருந்த டூரிசம் மலேசியாவின் சின்னத்திற்கும் பெயருக்கும் பதிலாக, அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாத்துறை அமைப்புகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்க நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறத் தடை விதிக்கும் 2003ஆம் ஆண்டு சேவை சுற்றறிக்கை 3. தனியார் துறையினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் உட்பட அரசாங்க நிகழ்ச்சிகளில் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான வழிகாட்டிகள் குறித்து பெரிக்காத்தான் நேஷனலின் டுங்கூன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹசான் ரம்லி கேட்ட கேள்விக்கு தியோங் இவ்வாறு பதிலளித்தார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருப்போரினால் ஏற்பாடு செய்யப்படும் இரவு விருந்து நிகழ்ச்சிகளுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என்று பதிலளித்த தியோங், அந்நிகழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து தமது வருத்தத்தை தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மலாக்காவில் நடத்தப்பட்ட உலக சுற்றுலா மாநாடு மற்றும் உலக வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட குளோபல் டிராவல் கூட்டம் போன்ற சுற்றுலா தொடர்புடைய நிகழ்ச்சிகளில் இந்த சுற்றறிக்கையை தமது அமைச்சு மீறியதில்லை என்றும் தியோங் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்திய அவர், குற்றச்சாட்டுகளை சுமத்துவது மற்றும் அவமதிப்பு செய்வதிலிருந்து விலகி இருக்குமாறும்கேட்டுக் கொண்டார். "பிரதமர் எங்களுக்கு அவரின் அறிவுரையை வழங்கி இருக்கின்றார். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டும் இருக்கின்றோம். இதை அரசியலாக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று தியோங் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



