பினாங்கில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, அக். 12-

பினாங்கு மாநிலத்தில் செயல்படுகின்ற பற்பலத் துறைகளின் மருத்துவர்கள் யாவரும் அர்ப்பண உணர்வுடன் சேவையாற்றி வருவது தொடர்பில், மாநில சுகாதாரத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் பாராட்டு தெரிவித்துள்ளார். மருத்துவத் துறை மீதான விசுவாசமும் இலட்சியத்தை ஈடேற்றும் கொள்கை உணர்வும் இவர்களை அர்ப்பணப் பாதையில் பயணிப்பதற்கு தூண்டுகோலாக துணை நிற்பது போற்றதலுக்குரியது என்றும்
அவர் வாழ்த்துரைத்துள்ளார்.

பொதுவில் மருத்துவர்களிடம் வெளிப்படும் இரக்க சிந்தையும் நோயாளிகள் மீதான பரிவும் கருணையும் அவர்களை சேவகர்களைப் போல் திகழச் செய்வதையும் மறுப்பதற்கில்லை என்று புகழுரைத்த அவர், தொழில் ரீதியாக இவர்களிடம் வெளிப்படும் பச்சாதாப குணம் இவர்களின் பணிக்கு ஒருவிதப் பிடிப்பினை அளித்து, சமூகத் தொண்டாற்றும் தாராளத் தன்மைக்கும் இட்டுச் செல்வதை தம்மால் உணர முடிவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் இங்கிருக்கும் ஜோர்ஜ்டவுன் வட்டாரத்தின் கர்னி கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் "ஜி" நட்சத்திர விடுதியில் விமரிசையாக அனுசரிக்கப்பட்ட, மருத்துவர்கள் தின நிகழ்ச்சிக்கு சிறப்புப் பிரமுகராக டேனியல் அழைக்கப்பட்டிருந்தபோது, தனக்கு விடுக்கப்பட்ட சிறப்புரையில், அவர் மேற்கண்டவாறு மருத்துவர்கள் மீதான நற்குணங்களை குறிப்பிட்டு, புளகாங்கிதம்
அடைந்தார்.

மக்களின் ஆரோக்கியத்திற்கு துண்களாக விளங்கும் மருத்துவத் துறையினர்.சுகாதாரப் பாதுகாப்புக்கு துணை நிற்கும் பங்களிப்பை தொன்று தொட்டு ஆற்றி வருவதை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை எனவும், ஒவ்வொரு துறையிலும் புதிய வகை கண்டுபிடிப்புகளால் சிகிச்சை முறைகளில் அபரிமித மாற்றங்களுக்கும் வழி வகுக்கும் இவர்களின் பணித் திறனும் கடமை உணர்வும் வரவேற்கக் கூடியது என்று வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பற்பல மருத்துவர்களின் சேவைகளைப் பட்டியலிட்டு, வரவேற்பு கூறிய மலேசிய மருத்துவர் சங்கத்தின் பினாங்குக் கிளைத் தலைவர் டத்தோ டாக்டர் பரம்ஜித் சிங், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் யாவரும் ஒரே குடையின் கீழ் இணையும் வகையில் இச்சங்கத்தில் ஐக்கியம் பெற்றிருக்கும் யாவருக்கும் தாம் நன்றியையும் நல்வாழ்த்தினையும் கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *