இந்தியர்களின் அதிருப்தி இன்னொரு பாடம் கற்பிக்கலாம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஏப்ரல் 25: நாளை நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தல் இந்தியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தேர்தலாக இருக்கும் என்றும், பாரிசான் – பெரிக்காத்தான் – பி.எஸ்.எம் என மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், இந்தத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் 14 விழுக்காடு வாக்குகள் இந்தத் தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும் என்றும், அது ஆளும் தரப்பினருக்கு ஒரு பாடமாக அமையக் கூடும் என்றும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் நினைவூட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் அல்லது யார் தோற்கிறார்கள் என்பது விஷயமல்ல. ஆனால், இந்தியர்கள்  இந்தத் தேர்தலில் யார் பக்கம் இருக்கப்போகிறார்கள் என்பதுதான் இங்கே எல்லாராலும் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

ஏனெனில், கடந்த 15 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாடளவில் இந்தியர்களின் முழுமையான 84 விழுக்காடு வாக்குகள்தான் பக்காத்தான் கூட்டணிக்கு வலு சேர்த்து ஆட்சியில் அமர்த்தியது. ஆனால், அதே இந்திய மக்கள்தான் தற்போது இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, தங்கள் வேதனயை ஆளும் தரப்பினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் இந்தியர்களின் பெரும்பான்மையான வாக்குகள் பி.எஸ்.எம் கட்சியின் பவானிக்கே  செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக தாம் கருதுவதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

பி.எஸ்.எம் கட்சி வெற்றி பெறுமா? அல்லது தோல்வி அடையுமா? அது தெரியாது. ஆனால், பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்குகளும், கணிசமான சீனர்களின் வாக்குகளும் பவானிக்குத்தான் செலுத்தப்படும் என்பது என் எண்ணம் என அவர் தெரிவித்தார்.

காரணம், மற்ற கட்சிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை நம் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

பி.எஸ். எம் கட்சியினரைப் பொருத்தவரை  அவர்களில் பலர் சமயம் தேவையற்றது என்பார்கள்.  அந்த உணர்வு  அவர்களுக்குக் கிடையாது. அதேவேளை நம் இந்தியர்களில்  பெரும்பான்மையானவர்கள்  சமய உணர்வோடு இருப்பவர்கள். இந்த நிலையிலும் சமயப் பற்றற்றற பி,எஸ்.எம் கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், அதுதான் இந்தியர்களுக்கான ஒற்றுமையின் பலம். இதன் வழி தங்களின் மனக்குமுறலை ஆட்சியாளர்களுக்குக் காட்ட நினைக்கிறார்கள். தங்கள் வாக்குகளின் பலத்தை நிரூபிக்க நினைக்கிறார்கள் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

எப்படி ஹிண்ட்ராஃப் எனும் பெரும் புரட்சி பெரும் சக்தியாக வெடித்து, நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, பெரும் மலையாக இருந்து பிரமாண்டம் காட்டிய பாரிசானை வீழ்த்தியதோ. அதே போன்ற நிலை இப்போதும் ஏற்படலாம்.

இந்தியர்களின் வலிமை மிக்க அந்தப் போராட்டத்தின் பலனாகத்தான் DAP தனித்தீவில் வெற்றியை ருசித்தது. PKR பல மாநிலங்களைத் தன் வசம் கொண்டது. பாரிசனுக்கு அந்த வரலாற்றுப் புரட்சி பாடம் கற்பித்தது. மீண்டு எழ முடியாத வண்ணம் சம்மட்டி அடி கொடுத்தனர் நம் மக்கள்.

பாரிசானின் அன்றய தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது இந்தியர்கள் தொடர்பான பாடாங் ஜாவா ஆலய விவகாரம்தான். அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியால்தான் ஆட்டம் கண்டது பாரிசான்.

அதே போன்ற ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் ஒரு தேர்தலாக, இந்தியர்களின் ஒற்றுமையை நிரூபிக்கும் ஒரு தேர்தலாக, இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு தேர்தலாக இதுவும் அமையலாம் என்பதில் ஐயமில்லை.

எனவே, வரவிருக்கும் 16 வது பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு இதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் ஆளும் தரப்பினர் என ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தினார்.

மேலும், அதற்குப் பிறகாவது இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும், சிற்றுளியும் மலையைப் பிளக்கும்.... எனவே வெற்றியை நிர்ணயிக்கும் இந்தியர்களின் வாக்குகளை உதாசீனப்படுத்தாமல், இனி வரும் காலங்களிலாவது மக்களின் மனசு போல் ஆட்சி அமையட்டும்.

இது போன்ற இடைத் தேர்தல்கள்தான் எச்சரிக்கை மணி அடிக்கும். இதன் மூலமாகத்தான் ஆட்சியின் நிலையை அளவிட முடியும். எனவே  அதைப் புரிந்துகொண்டு, 16 வது பொதுத்தேர்தலுக்கு பக்காத்தான் தயாராக வேண்டும் என்பதே எண் எண்ணம்.

மேலும் எனது இந்தக் கூற்றினைக்கூட திரித்துக் கூறி அன்வாரிடம் நல்ல பேர் எடுக்க சிலர் முயல்கிறார்கள் என்பதை நான் அறிவேன். பிரதமரின் பிரதிநிதி என்று சொல்லித் திரியும் தம்பூன் ஆசாமி ஒருவரும், எப்போதும் நெற்றியில் திலகமிட்டுத் திரிந்துகொண்டிருந்தவரும், இப்போது திடீரென திலகம் இல்லாமல் வலம் வருபவருமான அரசு அதிகாரி ஒருவரும்  அந்த வேலையைச் செய்வார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அவர்கள் விசுவாசத்தைக் காட்டட்டும். நான் என் அக்கறையைக் காட்டுகிறேன்.

மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது கடமை. அதோடு அந்த உண்மையை ஒளிவு மறைவில்லாமல் நமக்கு வேண்டியவராகவே இருந்தாலும் சுட்டிக்காட்டுவது நல்ல நட்புக்கு அழகு. அதைத்தான் நான் செய்கிறேன். இதைப் புரிந்துகொண்டு இந்தியர்களின் எதிர்பார்ப்பை நமது பிரதமர் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

மேலும், ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்!

Ayer Kuning bakal jadi pilihan raya penting bagi masyarakat India, kata Oms P. Thiagarajan. Beliau harap undi India beri mesej jelas kepada kerajaan. PSN dijangka terima sokongan kuat sebagai protes terhadap kekecewaan terhadap kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *