செப்டம்பர் 27 பேரணியில் மக்கள் மட்டுமே பங்கேற்றால்தான் அர்த்தமுள்ள பேரணியாக அமையும்!
- Muthu Kumar
- 02 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.2 -
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தாங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கும் பேரணிக்காக, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகள் தங்களின் உறுப்பினர்களை திரட்டக் கூடாது.
அதற்கு மாறாக, அன்வாருக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்க சாமானிய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று. அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்பேரணியை அரசு சாரா அமைப்புகள் ஏற்பாடு செய்து வருவதால், அதில் எந்த ஓர் அரசியல் உள்நோக்கமும் கலக்கப்படாமல், இயல்பான ஒரு பேரணியாக நடைபெற வழிவகுக்கப்பட வேண்டும் என்று, மலாயாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அவாங் அஸ்மான் பவியும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலியும் கூறியுள்ளனர்.
அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட காரணத்தினால், அண்மைய "தூருன் அன்வார்" பேரணி போன்ற ஒன்று கூடுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து மலேசியாவின் சாமானிய மக்கள் தடுக்கப்பட்டதாக மஸ்லான் குறிப்பிட்டார்.
"அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்தாலோ அல்லது ஈடுபட்டாலோ, மக்கள் மத்தியில் அத்தகைய பேரணிகள் குறித்து சில சந்தேகங்களும் பயமும் ஏற்படும். அதோடு ஒதுக்கப்படும் சம்பவங்களும் நிகழும். "ஆனால், சில சுயேட்சை சாரா அமைப்புகளினால் அரசு சாரா பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டால், அது மாறுபட்டிருக்கும். மக்களை பலனடையச் செய்திருக்கும் ஒரு தலைவர் என்ற கொள்கை அடிப்படையில் பிரதமருக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்" என்று' மஸ்லான் தெரிவித்தார்.
நாட்டில் நடத்தப்படும் அரசியல் பேரணிகள் மலேசியர்களை ஈர்ப்பதில் தோல்வி அடைந்து வருவதாகக் கூறிய அவர், தங்களின் மனத்துக்கு நெருக்கமான விவகாரங்கள் மற்றும் தங்களின் தேவைகளுக்கு பயன்படாதவையாக அவற்றை மக்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்றார்.
"மலேசியர்களின் போக்கு இப்போது மாறிவிட்டது. இலக்கவியல் செயல்பாடுகள், இணையம் மூலமான புகார்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் விவாதங்களை நடத்தும் சூழலில் மலேசியர்கள் இருக்கின்றனர்.
"அதனால், வீதிகளில் ஆர்ப்பாட்டங்களையோ பேரணிகளையோ நடத்த அவர்கள் இனியும் விரும்புவதில்லை. "அன்றாட அரசியல்" போன்ற ரூபத்தில்,அரசியல் விழிப்புணர்ச்சி அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. "தூருன் அன்வார்" பேரணியைப் பொறுத்த வரையில், அதன் தொடர்பில் ஒரு தெளிவான இலக்கு இல்லாமல் போய்விட்டது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஓர் உறுதியான பதவியேற்புத் திட்டம் இல்லாததாலும் அப்பேரணியினால் மக்களை கவர முடியாமல் போனது.
“இதேபோன்றுதான் பிரதமருக்கான ஆதரவு பேரணியும் அமையக் கூடும். பேரணி நடத்தப்படுவதற்கான அர்த்தமுள்ள உள்ளடக்கம் இல்லாமல் முற்றிலும் ஓர் அடையாள ரீதியாக மட்டுமே இருந்தால், அது மக்களை கவராது" என்று மஸ்லான் தெரிவித்தார்.கடந்த சனிக்கிழமை "தூருன் அன்வார்" பேரணி நடந்த அதே இடத்தில் அன்வாருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் ஒரு பேரணியை நடத்த அகில மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் இந்நிலையில், செப்டம்பர்27 பேரணியில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல், பொதுமக்கள் அரசாங்கத்தை மக்கள் ஆதரிப்பதாக அர்த்தமாகும் என்று அவாங் அஸ்மான் கூறினார்.
பேரணிகள் எந்த வகையிலும் யாராலும் நடத்தப்படலாம் என்றும் ஆனால், ஆக்கப்பூர்வமான கொள்கைகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதைத்தான் மக்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 27 பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தாலும், அரசியல் ரீதியிலான ஒரு பேரணியாக அது மாறிவிடுவதைத் தவிர்க்க, அன்வார் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று அவாங் அஸ்மான் கூறினார். எனினும், தமது பாராட்டை தெரிவிக்க மற்றும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய அம்சங்கள் அடங்கிய தமது உரையை அன்வார் ஒரு காணொளியில் பதிவு செய்து பேரணி ஏற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதே சிறந்த செயலாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



