உணவுத்துறை நாட்டிற்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது-துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புசியா!
- Muthu Kumar
- 09 Oct, 2025
கோலாலம்பூர், அக். 9-
மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தில் 3.000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உணவகங்கள் செயல்பட்டு, நாட்டின் வருவாய்க்கு பக்கபலமாக இருந்து வருவது பாராட்டுக்குரிய ஒன்று என்று உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினத் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஹாஜா புசியா பிந்தி சாலே கூறினார்.
நேற்று தலைநகர் ஜாலான் டூத்தாவிலுள்ள மாட்ரெட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பிரெஸ்மா எனப்டும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 21ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், இந்த உணவுத்துறை நாட்டில் 99 பில்லியன் ரிங்கிட் வருவாயை எட்டியுள்ளது.
நாட்டில் மடானி அரசாங்கத்துக்கு பிரெஸ்மா அளித்து வரும் ஆதரவு மிகவும் பெருமைக் கொள்ள வைக்கிறது. அந்த ஆதரவு தொடர வேண்டும் என்று டத்தோ டாக்டர் ஹாஜா புசியா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே உள்நாட்டு தொழில்களில் மலேசியர்கள் ஆர்வத்துடன் பணிபுரிய வந்தால் சம்பந்தப்பட்ட துறை நிச்சயம் முன்னேறும். ஆனால் யாரும் வருவதில்லை என்பதுதான் மிகப் பெரிய குறைபாடு என்று பேசிய பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஜவாஹர் அலி தாயுப் கூறினார். இக்கூட்டத்தை உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினத் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஹாஜா புசியா பிந்தி சாலே கலந்து கொண்டு தொடக்க வைத்தார்.
டத்தோ ஜவாஹார் அலி மேலும் பேசுகையில், தற்போது உணவுத் தொழில் மிகவும் பிரபலமான துறையாக இருந்தபோதிலும் அதனை எதிர்கொள்ள பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர் நோக்குவதாக அவர் கூறினார்.
செல்ஃப் எண்ட் சர்வீஸ் எனப்படும் சுலபமாக உணவுகளை எடுக்கும் முறையைத்தான் இனி பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வரும் வாய்ப்பு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் எண்ணெய் நிலையங்களில் சுலபமாக எண்ணெய் நிரப்பும் நிலையை உருவாக்கியது. எல்லாரும், அது டத்தோ, டான்ஸ்ரீ என்று யாராக இருந்தாலும் சரி சுயமாக எண்ணெய் நிரப்ப வேண்டும்.
அந்த நிலைபோன்று உணவகங்களிலும் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இந்த துறைக்கு வருவதற்கு சிலர் தயக்கம் காட்டுகின்றனர் என்று டத்தோ ஜவஹார் அலி கூறினார். இந்த நிலையில் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக டத்தோ முகமட் மொசின் பின் அப்துல் ரசாக் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மலேசிய இந்திய உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தாமரை குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான டத்தோ ரெனா. இராமலிங்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



