கட்சியின் குறைகூறல்களை பொதுவில் கூறாமல் கட்சிக்குள் எழுப்ப வேண்டும்-வோங் சென்!
- Muthu Kumar
- 23 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 23 -
பிகேஆர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹசான் கரீம், தமது ஆதங்கங்களை அல்லது குறைகூறல்களை பொதுவில் வெளிப்படுத்துவதற்கு முன்னர், கட்சிக்குள் எழுப்ப வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த வோங் சென் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகளைக் குறைகூறியதற்காக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினால் அழைக்கப்பட்டுள்ள தமது சகாவுமான ஹசான் கரீம், எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும், அதை முதலில் கட்சிக்குள் எழுப்ப வேண்டும் என்று வோங் தெரிவித்துள்ளார்.
“பிரதமருடன் ஹசான் மிகவும் நெருக்கமானவர். ஆனால், சில விவகாரங்களில் ஓர் உறுப்பினர் அதிருப்தி அடைந்தால், பொதுவில் வெளிப்படுத்துவதற்கு முன்னர், கட்சிக்குள் அதை எழுப்ப வேண்டும் என்று கட்சியின் சட்டவிதிகள் கூறுகின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.
“இதற்கு முன்னர் ஹசான் பல முறை அரசாங்கத்தை குறைகூறியிருக்கின்றார். குறைகூறும் அவரின் உரிமையை பிரதமர் ஏற்றுக் கொண்டும் உள்ளார்.“எனினும், குறைகூறல்கள் கட்சியின் தோற்றத்தை மிகவும் பாதிக்கும் அளவில் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும் என்பதுடன் அது குறித்து கட்சிக்குள் ஆலோசிக்கப்பட வேண்டும்."அத்தகைய ஆலோசனைகளுக்குப் பின்னர் இன்னமும் அவர் மனநிறைவு கொள்ளாவிட்டால் மட்டுமே அவர்கள் பொதுவில் படுத்தலாம்” வெளிப்படுத்தலாம்” என்று வோங் கூறினார்.
இரண்டாவது 5ஜி இணைப்புத் தொடர் வசதித் திட்டத்தை யூ மொபைலுக்கு வழங்குவதென்ற முடிவு உட்பட அரசாங்கத்தின் பல முடிவுகளை பொதுவில் குறைகூறியதற்காக, ஹசான் கரீமுக்கு பிகேஆர் கட்சி அழைப்பாணையை" அனுப்பியுள்ளது.பிகேஆர் கட்சியின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் மாட்சிமை தங்கிய பேரரசரை அவமானப்படுத்தி இருப்பதாகவும், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசான் கரீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் ஒன்று கூறியது.
கட்சியில் ஹசானின் எதிர்காலம் குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவமே இறுதி முடிவை எடுக்கும் என்று, பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான் இ கியூ தெரிவித்துள்ளார்.கட்சியின் இறுதி முடிவு எதுவாகவும் இருக்கலாம் என்றும் இதுதான் நடக்கும் என்று தம்மால் தீர்க்கமாகக் கூறமுடியாது என்றும் கூறிய, கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் ஓர் உறுப்பினருமான வோங், "ஒருவேளை ஹசான் கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படக் கூடும் அல்லது அதிகபட்சமாக இடைநீக்கம் செய்யப்படக் கூடும்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *