ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பிறகே தலைமை நீதிபதி முடிவு செய்யப்படுவார்!
- Muthu Kumar
- 15 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 15-
இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பிறகே நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து முடிவு செய்யப்படும் என்று, சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
அதோடு, புதிய நீதிபதிகள் நியமனம் குறித்து நீதித்துறை நியமன ஆணையத்தின் பரிந்துரைகள் கட்டாயமானது அல்ல என்றும், அஸாலினா கூறியுள்ளார். எனினும், நீதித்துறை நியமன ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு பிரதமர் உட்பட்டவர் என்று கூறியிருக்கும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம், அஸாலினாவின் இக்கூற்றை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஒரு சர்ச்சையாக ஆக்கி இருந்தார்.
தற்போதைய சட்டத்தின் கீழ் அவ்வாணையத்தின் பங்கு, நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதற்கான வேட்பாளர்களைத் தணிக்கை செய்வது, மதிப்பீடு செய்வது மற்றும் பரிந்துரைப்பது மட்டுமே ஆகும் என்று. ஜொகூரின் பெங்கேராங்கில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அஸாலினா கூறியிருந்தார். "நீதிபதிகள் நியமனத்தில் அவ்வாணையத்தின் பரிந்துரைகளே இறுதியானவை அல்ல. அது பெயர்களை மட்டுமே பரிந்துரைக்கிறது. மேலும் அத்தகைய பரிந்துரை கட்டாயமானதும் அல்ல" என்றும் அவர் கூறியிருந்தார்.
நீதித்துறை நியமன ஆணையத்தின் பரிந்துரைகள் பிரதமரிடம் மட்டுமே முன்வைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் கலந்து பேசிய பின்னர், பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மாட்சிமை தங்கிய மாமன்னரினால் உயர் நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றங்களின் நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆணையத்தின் பரிந்துரைகள் அல்லது பணி சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றால், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று, அஸாலினா தெரிவித்தார்.
அவ்வாணையமானது, சட்ட விளைவைக் கட்டுப்படுத்தாத வெறும் ஒரு நிர்வாகம் மட்டும்தான் என்று, முன்னாள் சட்ட அமைச்சர் டான் ஸ்ரீ நஸ்ரி அஜீஸ் நாடாளுமன்றத்தில் அளித்திருந்த முந்தைய விளக்கத்தை அஸாலினா கட்டிக் காட்டினார்.
தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஆகியோர் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து குறைகூறல்கள் நிலவி வரும் வேளையில், அஸாலினா இவ்வாறு தெரிவித்தார்.இதன் தொடர்பில் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் நேற்று திங்கள்கிழமை மறியல் ஒன்றை நடத்தியது.
சட்டத்தின் எல்லையை மீறாத வரையிலும் பொறுப்புடனும் மறியலை நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என்று அஸாலினா கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



