சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்... மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், பிப் 10: சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் திடமான முடிவு எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளையும் சேர்த்து அனைத்து மாநில அரசுகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் தொடர்பான விவகாரம் மிகவும் சிக்கலானது என்றும், இதற்கான கொள்கை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டது என்றும் அன்வார் ஒப்புக் கொண்டார்.

சமரசத்திற்கு பலன்களும் வலிமையும் உண்டு. ஆனால் அந்த சமரசம், நாட்டின் அடித்தளங்களையும் வலிமையையும் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
ஏற்கெனவே சட்ட விதிகளை திட்டமிட்டு மீறி கட்டப்பட்ட எந்த வழிபாட்டு தலத்தின்மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும், ஒழுங்குமுறை விதிமுறைகளை பின்பற்றாத எந்த வழிபாட்டு தலங்களின் கட்டுமானத்தையும் இனி அனுமதிக்க மாட்டோம் என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் சமீப வாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், இந்து சமூகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அமைதியையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தனர்.

சட்டவிரோத கோவில்களுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்ட பேரணி, போலீஸ் உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்த முயன்ற சிலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *