தேசிய விவசாயிகள் அமைப்பின் சட்ட இடைநீக்கம், அரசியல் நோக்கத்துடன் இல்லை-டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு!
- Muthu Kumar
- 11 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 11-
தேசிய விவசாயிகள் அமைப்பின் (நஃபாஸ்) சட்ட இடைநீக்கம், அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்று, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு கூறியுள்ளார்.துணைப் பிரதமர் டத்டோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் கலந்து பேசப்பட்ட பின்னரே அம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நஃபாஸ்சில் இடம் பெற்றிருக்கும் அம்னோவைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் நீக்கி விடுவதன் மூலம், அதை ஆதிக்கம் செய்ய அமானா விரும்புவதாக ஊகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.“அந்த இடைநீக்கத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமேதுமில்லை. அந்த இடைநீக்கம் ஸாஹிட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது.
“நஃபாஸ்சின் நிர்வாகம் மற்றும் நிர்வகிப்பு முறையை மேம்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது" என்று பேராக், ஈப்போவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநில அமானா கட்சிக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அக்கட்சித் தலைவருமான முஹமட் தெரிவித்தார்.
நஃபாஸ்சின் சட்டம் இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு விவசாயிகள் அமைப்புச் சட்டத்தின் செக்ஷன் 20(1)இன் கீழ் விவசாயிகள் அமைப்பின் இடைக்கால பதிவாளராக செயல்படும் விவசாயிகள் அமைப்பின் தலைமை இயக்குநர் அமீர் மத்தாமினால் அந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நஃபாஸ்சின் ஆலோசனை மன்றத் தலைவராக, பொதுச் சேவைத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஸைனால் ரஹிம் செமான், கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *